Home மற்றவை கடலூர் மாவட்டத்தில் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

12
0
SHARE

கடலூர், டிச. 4&

தொடர் கனமழையால் கடலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஒகி புயல் மற்றும் அந்தமான அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த மூன்று நாட்களாக கடலூர்மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் முதல் கனமழை கொட்டி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில்  நீடித்து வரும் கன மழையால்  தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. மாவட்டம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் குட்டிக்குட்டி தீவுகள் போல்  தண்ணீர் சூழ்ந்து காட்சி அளிக்கின்றன. மேலும் பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 48 வீடுகள் சேதமடைந்து பலர் காயம்அடைந்துள்ளனர்.  பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

வீராணம், பெருமாள், வலாஜா உள்ளிட்ட ஏரிகளிலும் வெலிங்டன் நீர் தேக்கத்திலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பொதுப்பணித்துறையினர் ஏரிகளின் நீர் வரத்து நீர் இருப்பு குறித்து  தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.  மேலும் மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் குளம்குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில்  நீலத்தடி  நீர் மட்டம் உயர்ந்துவருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

கடல் சீற்றம்

கடல் சீற்றத்துடன் உள்ளது. கடற்பகுதியில் கனமழை மற்றும் கடற்காற்று பலமாக வீசி வருவதால்  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ராட்சத அலைகள் எழும்பி பலத்த சத்தத்தோடு கரைகளில் மோதி வருகின்றன. படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் கடற்கரையட்டிய பகுதிகளில் கட்டுமரங்கள் மூலமாக மீன் பிடிக்கப்பட்டு வந்தது. நேற்று கட்டுமரங்களும் கடலுக்கு செல்லவில்லை

கடந்த ஒரு வாரமாகவே மீன் வணிகம் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், உரக சாலைகள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சமீபத்தில் போடப்பட்ட சாலைகளும் இந்த மழையில் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன

மணிலா பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் நடப்பட்டுள்ளது. பெரும்பாலான வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இது வரை எவ்வித பாதிப்பும் இல்லை.

ஆனால் தொடர்ந்து மழை பெய்யுமானால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் 7 ஆயிரத்து 500  ஏக்கரில் மணிலா சாகுபடி நடைபெறும் தற்போது 3 ஆயிரம் ஏக்கரில் கார்த்திகை மற்றும் மார்கழி பட்டமாக மணிலா  விதைகள் ஊன்றப்பட்டுள்ளன. மழை காரணமாக மணிலா பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கால்நடைகள்

மழை காரணமாக கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் மழையிலும் குளிரிலும் பட்டினி கிடக்கின்றன.

தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மழையால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மழையுடன் சேர்ந்து குளிரும் வாட்டி வருவதால் முதியோர்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை கோரியுள்ளனர்.