Home தமிழகம் ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க வங்கி கணக்குகள் கண்காணிப்பு தேர்தல் அதிகாரி லக்கானி தகவல்

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க வங்கி கணக்குகள் கண்காணிப்பு தேர்தல் அதிகாரி லக்கானி தகவல்

10
0
SHARE

சென்னை, நவ. 29& ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில்பணப்பட்டு வாடாவை தடுக்க அனைத்து வங்கி கணக்குகளும் கண்காணிப்படுகிறது என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒருபகுதியாக ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திருநின்றவூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் கண்காணித்து வருகிறோம். வங்கிக் கணக்குகளில் திடீரென்று நடக்கும் பணப்புழக்கம், அதிக எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவது போன்ற சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று வங்கிகளை அறிவுறுத்தி இருக்கிறோம்.

அதுபோல் மது பாட்டில்களை ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம்.யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் வி.வி.பி..டி. எந்திரங்கள் பெங்களூரு பெல் கம்பெனியில் இருந்து வரவுள்ளன. புதிய 320 எந்திரங்கள் லாரி மூலமாக 30ந் தேதி (நாளை) இங்கு வந்து சேரும். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரத்து 100 பேர் பட்டியலில் இருந்து பெயரை தவறாக நீக்கிவிட்டதாகக் கூறி மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

650 பேர் பெயரை சேர்க்கும்படி புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இந்த இடைத் தேர்தலில் 1.1.17 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர்களாகக் கருதப்படுகிறார்கள். அந்தத் தொகுதியைப் பொறுத்தவரை 28ந் தேதியோடு (நேற்றோடு) பெயர் சேர்க்கும் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. டிசம்பர் 4ந் தேதியன்று அந்த தொகுதிக்கான இறுதி வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்படும். ஆர்.கே.நகர் தொகுதிக்குள், முக்கிய சாலை வழியாக வெளியூர் வாகனங்கள் செல்வதில் பிரச்சினை இருக்காது.

ஆனால் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்குச் சென்றால், அங்கு செல்லும் காரணம் குறித்து ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகள் விசாரிப்பார்கள். துணை ராணுவம் இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதிக்கு வந்துவிடும். அதன் பிறகு சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். கடந்த இடைத் தேர்தலில் முக்கிய சாலைகளில் மட்டும் 50 கண்காணிப்பு கேமராக்களை வைத்திருந்தோம். இந்த முறை 200 கேமராக்களை குடியிருப்புப் பகுதிகளில் நிறுவுவோம். இதுவரை தேர்தல் விதிகள் மீறுதல் தொடர்பான புகார்கள் வரவில்லை. எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

செலவின பார்வையாளர்கள் நியமனம்

ஆர்.கே.நகர்.இடைத்தேர்தலுக்கு செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி செலவின பார்வையாளர்களாக குமார் பிரணவ், ஷீல் அசீஸ், டி.கே.ஜகோரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் 7ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருவார்கள்.குமார் பிரணவ் இந்திய ரயில்வே கணக்கு துறையிலும், ஷீல் அசீஸ் இந்திய ராணுவ கணக்கு துறையிலும், டி.கே.ஜகோரியா இந்திய  வருவாய்த்துறையிலும் மூத்த அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் ஒரு காவல்துறை பார்வையாளர், பொதுப் பார்வையாளர் ஒருவர் என 5 பார்வையாளர்கள் டிசம்பர் 4ந் தேதியன்று வருகின்றனர். மீதமுள்ள 4 பேர் அதன் பின்னர் தொகுதிக்கு வருவார்கள்.ஒரு ஷிப்ட்க்கு 6 குழு என்ற விகிதத்தில் 18 சோதனைக் குழுக்களை தொகுதியில் பணி அமர்த்தி இருக்கிறோம். ஒரு குழுவில், மாநில அரசுப் பணியாளர் 2 பேர், 2 போலீசார், ஒரு வீடியோ படப் பிடிப்பாளர் ஆகிய 5 பேர் இடம்பெற்றிருப்பார்கள். இவ்வாறு தெரிவித்தார்.