Home சம்பவம் நாமக்கல்லில் ரூ.9 லட்சம் மோசடி கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் 3 பேர் கைது

நாமக்கல்லில் ரூ.9 லட்சம் மோசடி கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் 3 பேர் கைது

23
0
SHARE

திருவள்ளூர், நவ. 26&

நாமக்கல் வியாபாரி ஒருவரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் கும்மிடிப்பூண்டியைச் சார்ந்த வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரை அடுத்த கும்மிடிப்பூண்டி சிந்தலகுப்பத்தில் தனியார் டிரேடிங் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியை மதுரையை சேர்ந்த முஸ்தபா முகமது செரிப் என்பவர் நடத்தி வருகிறார். அவருடன் பார்ட்னர்களாக மதுரை சோழவந்தான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது மாலிக்(48), கேரளா கோட்டையம் பாரக்கீஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த வஜீம்(37), சென்னை அரும்பாக்கம் திருவள்ளூவர் நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்த அப்பாஸ்(44) ஆகிய 3 பேரும் பார்ட்னர்களாக இருந்து வந்தனர். ஆன்லைன் மூலமாக மிளகு, மஞ்சள், அரிசி, உளுந்து போன்ற பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து இருந்தார்கள். இதை கண்ட நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாழவந்தி நாடு கூச்சகிறாய்பட்டியைச் சேர்ந்த வடமலை(44) என்பவர் முஸ்தபா முகமது செரீப்பை கடந்த 20.8.2017 அன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னிடம் மிளகு உள்ளது.

அதனை விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். வடமலை ஒரு வாகனத்தில் 26.8.2017 அன்று கும்மிடிப்பூண்டி சிந்தலகுப்பத்தில் உள்ள 2,000 கிலோ மிளகை கொண்டு வந்து இறக்கினார். வடமலையிடம் மொத்த மிளகின் மதிப்பு ரூபாய் 11 லட்சத்து 90,000 என விலை நிர்ணயம் செய்தார்கள். அவர்கள் 2 லட்சத்து 10,000ஐக் கொடுத்தார்கள். மீதிப்பணம் ரூபாய் 9 லட்சத்து 80,000 ஐ வடமலையின் வங்கி கணக்கில் ஒரு வாரத்தில் செலுத்தி விடுவதாகக்  கூறினார்கள். அதனைத்தொடர்ந்து வடமலை ஊருக்கு சென்றுவிட்டார். ஒரு வாரம் கழித்து அவர்கள் வடமலையின் வங்கி கணக்கில் ரூபாய் 60,000 ஐ மட்டும் செலுத்தி உள்ளார்கள். மீதமுள்ள பணம் ரூ.9 லட்சத்து 30,000 15 நாட்களில் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறினர். அவர்கள் கூறியதுபோல் 15 நாட்களில் பணத்தை செலுத்தவில்லை.

இதனால் சந்தேகமடைந்த வடமலை அவர்களை தொலைபேசியில் அழைத்தபோது  செல்போன்கள் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தன. இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த வடமலை, கும்மிடிப்பூண்டி சிந்தலகுப்பத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டார். அக்கம் பக்கத்தில்  விசாரித்தபோது அந்த வியாபாரிகள் மேலும் பலரிடம் மஞ்சள், அரிசி, உளுந்து போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றியது தெரிய வந்தது. அந்த 4 பேரும் தலைமறைவாகி விட்டார்கள். பாதிக்கப்பட்ட வடமலை திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி உத்தரவின்படி மாவட்ட குற்றப்பரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்கள். இந்நிலையில், போலீசார் திருவள்ளூரில் பதுங்கி இருந்த முகமது மாலிக், வஜீம், அப்பாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான முஸ்தபா முகமது செரிப் என்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.