Home தமிழகம் பொறியியல் தேர்வு விடைத்தாள் திருத்த 1070 பேராசிரியர்களுக்கு தடை விதிப்புஅண்ணா பல்கலை. அதிரடி

பொறியியல் தேர்வு விடைத்தாள் திருத்த 1070 பேராசிரியர்களுக்கு தடை விதிப்புஅண்ணா பல்கலை. அதிரடி

18
0
SHARE

சென்னை, நவ.23&

பொறியியல் படிப்பிற்கான விடைத்தாள்களை திருத்தும் போது தவறாக திருத்திய 1070 பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்ய தடை விதித்து அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அவற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 கல்லூரிகளுக்கான தேர்வுகளை மட்டும் தனியாக அண்ணா பல்கலைக் கழகத்தின் கூடுதல் தேர்வு கட்டுப்படுத்தப்பட்டு மையத்தின் மூலம் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களால் திருத்தப்படுகிறது

அவற்றை தவிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வுகளை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் நடத்துகிறது. இந்த தேர்வினை சுமார் 580க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து பொறியியல் பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 பருவத் தேர்வுகள் என மொத்தம் 8 பருவத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அவற்றில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டப்படிப்பு என  ஒவ்வொருத் தேர்விற்கும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கான விடைத்தாள் ரகசியமாக திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத்தேர்வினை எழுதிய சுமார் 64 லட்சம்  விடைத்தாள்கள் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்களால் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த தேர்வு முடிவுகளை கண்ட பெற்றோர்களும், மாணவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு காரணம் தாங்கள் எழுதிய வினாக்களின் விடைகளுக்கு உரிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்பது தான்.

இதனால் இந்த ஆண்டு வழகத்திற்கு மாறாக மறுமதிப்பீடு செய்வதற்கு சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும் என  மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் இருந்த மதிப்பெண் விவரங்கள் அகற்றப்பட்டு, விடைத்தாள்கள் மீண்டும் வேறு பேராசிரியர்கள் மூலம் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மறுமதிப்பீட்டில் சுமார் 55 ஆயிரம் விடைத்தாள்களின் மதிப்பெண்களில் மாற்றம் இருந்ததால், அவர்களின் கிரேடு மதிப்பெண்களும் உயர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் அந்த விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்களை அழைத்து கடந்த செப்டம்பர் மாதம் 27 ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 21ந் தேதி வரை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில்  விடைத்தாள் திருத்தும் போது கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் செயல்பட்ட 1169 பேரிடம் விசாரிக்கப்பட்டு, 1070 பேர் விடைத்தாள் திருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 99 பேருக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட போது 21 முதல் 30 மதிப்பெண் வரை மதிப்பெண் மாற்றம் வரும் வகையில் திருத்தியவர்களுக்கு ஒரு ஆண்டு விடைத்தாள் திருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் 336 பேரும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 30 பேரும், திருச்சி மண்டலத்தில் 67 பேரும் என 433 பேருக்கு ஒரு ஆண்டு விடைத்தாள் திருத்த தடை அளிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மறு மதிப்பீட்டின் போது 31 முதல் 40 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் வகையில் கவனக்குறைவாக திருத்தி இருந்த பேராசிரியர்களுக்க 2 ஆண்டுகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னை மண்டலத்தில் 209 பேருக்கும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 47 பேருக்கும், திருச்சி மண்டலத்தில் 108 பேருக்கும் என 364 பேருக்கு 2 ஆண்டுகள் விடைத்தாள் திருத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விடைத்தாள் மறுமதிப்பீட்டின் போது 40 மதிப்பெண்களுக்கு மேலாக வரும் வகையில் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் 135 பேரும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 42 பேரும், திருச்சி மண்டலத்தில் 22 பேரும் என 99 பேருக்கு 3 ஆண்டுகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவில், கடந்த ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுப்பட்ட போது அதிகளவில் மதிப்பெண்களில் மாற்றம் வரும் வகையில் விடைத்தாள் திருத்தம் செய்திருந்தது, மறுமதிப்பீட்டின் போது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதற்கான விசாரணைக்கு அமைக்கப்பட்ட குழுவின் முன் நீங்கள் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லாமல் உள்ளது. எனவே குழுவானது தங்களை விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு விதிகளின் படி தகுதியற்றவர் என கருதுவதுடன், தங்களின் கடைமை மற்றும் பொறுப்பில் இருந்தும் தவறி உள்ளீர். எனவே தங்களுக்கு விடைத்தாள் திருத்த  3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் இனிமேல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுபவர்கள் கவனமுடன் செயல்படுவார்கள் எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here