Home சுடச்சுட 6 மாதங்களுக்குப் பிறகு முறைப்படிஒன்றிணைந்தது அ.தி.மு.க. அணிகள்

6 மாதங்களுக்குப் பிறகு முறைப்படிஒன்றிணைந்தது அ.தி.மு.க. அணிகள்

56
0
SHARE

சென்னை, ஆக. 22& முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5&ம் தேதி இறந்தார். அவர் இறந்த அன்றே, சசிகலா தலைமையில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பின்னர் அவர், மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமாகி தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்தார். ஜல்லிகட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்தார். வர்தா புயல் நிவாரணம் பெற்று தந்தார். குடிநீர் பிரச்சினைக்கு ஆந்திரா சென்றார்.

இதை தொடர்ந்து, சசிகலா வற்புறுத்தலின் பேரில், முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம்  ராஜினாமா செய்தார். கட்சியை விட்டு பிரிந்தார். பின்னர், சசிகலா முதல்வராக அவரை ஆட்சி மன்ற குழுத் தலைவராக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால்  சொத்து குவிப்பு வழக்கில்  சசிகலா சிறைக்கு சென்றார். அவர் சிறைக்கு செல்லும் முன்பு எடப்பாடி பழனிசாமியை முதல்வாரக்கி விட்டு சென்றார்.

மேலும், கட்சியை வழி நடத்த டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளர் ஆக்கினார். இதற்கிடையில், ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கினார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை நீதி விசாரணை மூலம் நடத்த வேண்டும். அ.தி.மு.க.வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இதற்கிடையில் ஆர்.கே. நகர் தேர்தலில், டி.டி.வி. தினகரன் வேட்பாளாராக களம் இறங்கினார். ஓ.பி.எஸ். அணியில், மூத்த தலைவர் மதுசூதனன் களம் கண்டார். இருவரும், அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாடினர். இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. ஓ.பி.எஸ். தரப்பில், அ.தி.மு.க. புரட்சி

தலைவி அம்மா அணி எனவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அம்மா அணி எனவும் கட்சியை தொடங்கினர்.

பணப் பட்டுவாடா புகாரில் தேர்தல் நிறுத்தப்பட்டது. மேலும் இரட்டை இலை

சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து,  டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து டி.டி.வி. தினகரன் அணி என ஒன்று உருவானது. வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் அவர் அணியில் இருந்து வருகின்றனர். இதில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தனி அணியாக நின்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இந்தநிலையில்  சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்று வந்தனர். அதன்பிறகு தமிழகத்தில், அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம், அரசுடமையாககப்படும், ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க , கமிட்டி அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து, இரு அணிகள் இணைப்புக்கான ஆலோசனை கூட்டம் விறுவிறுப்பாக தொடங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்று கூடி, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இரு அணிகள் ஆலோசனை கூட்டம் நடக்கும் போதே ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரீக்கப்பட்டது. இதனால் அன்றே இணைப்பு பேச்சுவார்த்தை முடிந்து இரு அணியினரும் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடினர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில், பேச்சு வார்த்தையில் திடீர் இழுபறி ஏற்பட்டது. சிலர், கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பு கேட்டனர். ஆனால், பொதுக்குழு கூடிதான், கட்சி பதவி கொடுக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதை தொடர்ந்து அன்று இரு அணிகள் இணைவதில் இழிபறியானது.

அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறும்போது, இரு அணிகள் இணைவது குறித்து, ஓரிரு நாளில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார். டிடிவிதினகரன் தரப்பிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.வில் இரண்டு அணிகள் இணைப்பு சாத்தியமான நிலையில் இந்த ஆலோசனை நடந்தது. அப்போது, துணை முதல்வர் பதவி, மாபா பாண்டியராஜனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி உள்ளிட்டவைகள் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் மதியம் 12 மணியளவில் முடிந்து விடும் என தொண்டர்கள் காத்திருந்தனர்.

ஆனால் மீண்டும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் மீண்டும் இழுப்பறி நிலை ஏற்படுமோ என்ற எண்ணம் எழுந்தது. இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின் பேரில்,

அமைச்சர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு என்ன பதவி தரலாம் என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டது.

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. அப்போது சில அமைச்சர்கள், சசிகலாவை கட்சி பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், அந்த அமைச்சர்கள் எதிர்ப்பு நிலையில் இருந்து மாறி, சமாதானம் ஆகினர்.

இதை தொடர்ந்து, அ.தி.மு.க. கட்சியை வழி நடத்த ஒ.பன்னீர்செல்வம் அணியினருக்கு பொறுப்பு வழங்கவும் முடிவுசெய்யப்பட்டது. இதற்கிடையில், இரு அணிகளின் ஆலோசனை கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

இதைதொடர்ந்து, இரு அணிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் முடிவடைந்தது. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர், ஒ.பி.எஸ். இல்லத்திற்கு சென்றனர். அங்கு, அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், காரில் அவர்கள் ஒ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். வழிநெடுகலும் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். சுமார், 2.45 மணியளவில் ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்தார். சுமார், 6 மாதங்களுக்கு பிறகு அவர் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.  அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர், ஒ.பன்னீர் செல்வத்திற்கு சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருகில் ஒ. பன்னீர்

செல்வம் அமர்ந்திருந்தார். இரு அணிகளின் நிர்வாகிகள் அருகருகே அமர்ந்தனர். மதுசூதனன், கேபி முனுசாமி, மா.பா பாண்டியராஜன், எம்.பி. வைத்திலிங்கம், பொன்னையன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், துணை சபா நாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் உள்ளிட்டோர்கள் அமர்ந்திருந்தனர். இதை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருவருக்கொருவர் கை கோர்த்து இரு அணிகளை இணைத்தனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஒ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் ஆவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்ட மன்றத்தில் கூறிய, தனக்கு பின்னாலும், இந்த இயக்கம், 100 ஆண்டுகள் நிலைத்து, ஆட்சி அதிகாரத்திலும் இருக்கும் என தெரிவித்தார். அ.தி.மு.க. எனும் எக்கு கோட்டையை யாராலும் அசைக்க முடியாது என்றார்.

இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, இந்த இரு அணிகள் இணைப்பு சிறப்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவோடு ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளோம். கட்சியை பலப்படுத்த கட்சியின் ஒருங்கிணைப்பளாராக ஒ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக நானும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும், துணை அமைப்பாளாராக வைத்திலிங்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் கட்சியை வலுப்படுத்த வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், 11 பேர் இடம் பெறுவர்.

இந்தியாவில் பெரிய கட்சிகள் உள்ளன. ஆனால் அவை பிரிந்தால் ஒன்று சேர்ந்ததாக சரித்திரம் இல்லை. அ.தி.மு.க.வில் சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும், அவை மீண்டும் இணைந்து விடும். இங்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறும் வேளையில், சிலர் இடையில் புகுந்து அனைத்தும் தடுத்து நிறுத்த பார்த்தவர்களுக்கு சம்மட்டியடி கொடுத்துள்ளது. எம்ஜிஆர், இந்த இயக்கத்தை ஆரம்பித்த போது, எத்தனை கேலி விமர்சனங்களை கண்டார். அதன்பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரவு, பகல் பாராமால் அயாராமல் உழைத்தார். இந்த இயக்கத்தில், ஒரு துளி களங்கம் வராமால் பார்த்து கொள்ள வேண்டும். எதிரிகளை வீழ்த்தி, இரட்டை இலையை மீட்டெடுப்போம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியது, இந்த இயக்கம் 1 00 ஆண்டுகளுக்கு பிறகும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்றார்.

சசிகலா நீக்கப்படுவார்

அ.தி.மு.க. இரு அணிகள் இணைந்தபிறகு, எம்.பி. வைத்திலிங்கம் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு விரைவில் கூட்டப்படும். அந்த பொதுக்குழுவில், கட்சியில் பொதுச்செயலாளர் சசிகலா பதவியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு, நிர்வாகிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டு, கை தட்டி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து, இரு அணிகள் நிர்வாகிகள் , ஒருவரையருவர் கை குலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பின்னர், அனைவரும், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து ஒன்றாக புறப்பட்டனர்.

தலைவர்களுக்கு மரியாதை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் சிலர் ஒரே காரில் மெரினாவுக்கு சென்றனர். அங்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் . கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடினர். முதலில், ஜெயலலிதா நினைவிடத்தில், முதல்வர் எடபபடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், எம்ஜிஆர், நினைவிடம் சென்று , அங்கும் மரியாதை செலுத்தினர். ஒ.பன்னீர்செல்வம், தனது தர்ம யுத்தத்தை , ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், இரு அணிகளும்நேற்று ஒன்றிணைத்து, ஒன்றுப்பட்ட அதிமுகவானது. இதை தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, ஒ. பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு பிரதமர் வாழ்த்து 6 மாதங்களுக்கு பிறகு முறைப்படி அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.