Home தமிழகம் சென்னை அணுமின் நிலையம் சார்பில் மீனவர்களுக்கான திறன் ஊக்குவிப்பு பயிற்சி

சென்னை அணுமின் நிலையம் சார்பில் மீனவர்களுக்கான திறன் ஊக்குவிப்பு பயிற்சி

10
0
SHARE

கல்பாக்கம், நவ. 14&

45 மீனவர்களுக்கு தொழில் சார்ந்த திறன் ஊக்குவிப்பு பயிற்சி நேற்று துவங்கியது.  சென்னை அணுமின் நிலையம், பிளாண்ட் அறக்கட்டளையுடன் இணைந்து இப்பயிற்சி வகுப்பினை ஏற்பாடு செய்துள்ளது.

கல்பாக்கம் அணுவாற்றல் துறை மைய வளாத்தில், சென்னை அணுமின் நிலையம் உட்பட பல்வேறு பிரிவுகள் இயங்குகின்றன. இப்பிரிவுகளில் இயங்கும் சென்னை அணுமின் நிலையம் தனது வருவாயில் ஒருபகுதியினை சுற்றுப்புற கிராம மக்களின் நல மேம்பாட்டில் அக்கறை கொண்டு, தனது சமூக பொறுப்புக்குழு மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய முக்கிய பணிகளை பல்வேறு தனியார் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனத்துடன்  இணைந்து செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு தொழில் சார்ந்த திறன் ஊக்குவிப்பு பயிற்சியினை பிளாண்ட் எனும் தொண்டு நிறுவன அறக்கட்டளையுடன் இணைந்து அளிக்க முடிவு செய்தது.

கடந்த 13 ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதிவரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி துவக்கவிழா நேற்று கல்பாக்கம் நகரியத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் ஆய்வக கருத்தரங்க கூடத்தில் நிலைய சமூக பொறுப்புக்குழு தலைவர் கி. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. நிலைய முதன்மை கண்காணிப்பாளர் ஆர்.கே. குப்தா, மனிதவள தலைவர் பத்மநாபன், பிளாண்ட் அறக்கட்டளையின் இயக்குனர் முனைவர் ஜான் சுரேஷ், பொறியாளர் கே.வி.கிருஷ்ணமூர்த்தி, பிளாண்ட் ஒருங்கிணைப்பாளர் ஆண்டோஆசீர்வாதம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மனித வள மேலாளர் நிர்மலாதேவி வரவேற்றார்.

இவ்விழாவில், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ரவி சத்யநாராயணா சிறப்பாளராக கலந்துகொண்டு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து விளக்க உரையாற்றினார்.

ஏற்கெனவே, இரண்டு கட்டமாக 83 பயனாளிகள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற நிலையில், மூன்றாம் கட்டமாக நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் நெமிலிக்குப்பம், சூளோஜிக்காட்டுக்குப்பம், தேவனோஜிகுப்பம், மாமல்லபுரம்குப்பம், வெண்புருஷம்குப்பம், என மீனவ கிராமங்களைச் சேர்ந்த 45 பயனாளிகள் பயிற்சி பெறுகின்றனர். இதில் கடல்வளம் பாதுகாத்தல், கடலில் பாதுகாப்பாக மீன்பிடித்தல், ஜி.பி.எஸ் கருவியை பயன்படுத்துதல், கடலில் கூண்டுமூலம் மீன் வளர்த்தல், கடல் ஆமைகளை பாதுகாத்தல், என்பன குறித்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இதேபோல், அடுத்த மாதமும், பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இவ்விரு பயிற்சி வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்த செலவு 3 லட்சத்து 47ஆயிரத்து 200 ரூபாயாகும்.  பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here