Home சுடச்சுட 412 மையங்கள் கொண்டு வர திட்டம்: 12&ம் வகுப்பு மாணவர்கள் தகுதி தேர்வை எதிர்கொள்ள முதல்கட்டமாக...

412 மையங்கள் கொண்டு வர திட்டம்: 12&ம் வகுப்பு மாணவர்கள் தகுதி தேர்வை எதிர்கொள்ள முதல்கட்டமாக 100 பயிற்சி மையங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

3
0
SHARE

12&ம் வகுப்பு மாணவர்கள் தகுதித் தேர்வை எதிர்கொள்ள 412 பயிற்சி மையங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 பயிற்சி மையங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, நவ.14&

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தும், பயிற்சி கையேட்டை வெளியிட்டும், பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கையேட்டை வழங்கியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

மாணவர்களுக்கு வசதி

மாணவர்களுக்கு சிறப்பான கல்வி அளிப்பதாலும், மக்களின் உடல் நலம் பேணி பாதுகாக்கப்படுவதாலும் மனித வளம் மேம்பாடு அடையும். மனித வளம் மேம்பட்டால், அந்த மாநிலத்தில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூறிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறைக்கு வரலாறு காணாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகளை மாணவர்களுக்கு செய்து கொடுத்துள்ளார்.

விலையில்லா புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை, காலணிகள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டப் பொருட்கள் மாணவர்களுக்கு விலையின்றி வழங்கப்படுகின்றன. மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வசதியாக சைக்கிள், கற்றலை எளிதாக்கி இணையம் மூலம் கல்வி பயில வசதியாக லேப்டாப் வழங்கப்பட்டு வருகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசும் இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

எம்.எம்.எஸ். மூலம்

மதிப்பெண் அடிப்படையிலான தரப்பட்டியல் முறை முழுவதுமாக கைவிடப்பட்டிருக்கிறது. அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் அறிய அங்குமிங்கும் அலைவதை தவிர்க்கும் வகையில், எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டின் தொடக்கத்திலேயே பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை அறிவிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. 11&ம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வுமுறை கொண்டுவரப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒளிவு மறைவின்றி இந்த ஆண்டு 2,373 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. 1 முதல் 12&ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களை மாற்றியமைக்கும் பணிக்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களாலும், மிகச் சிறந்த மனித வளத்தினாலும், புதுமைகளின் முக்கிய மையமாகவும், இந்தியாவின் அறிவின் தலைநகராகவும் தமிழ்நாடு அறியப்படும் என தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை 2023 கையேட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதை நிருபிக்கும் வகையில் மாணவர்களின் அறிவுத் திறனை  மேலும் மெருகூட்டி, அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் விதத்தில்  இப்பயிற்சி வகுப்பினை தொடங்கி வைக்கப்படுகிறது.

தகுதிபோட்டிதேர்வு

தகுதி நுழைவு போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எவ்வித தயக்கமும், தளர்வும் இல்லாமல்  உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில்  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு எடுத்த முடிவின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும், ஸ்பீடு அறக்கட்டளையும் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது இன்று செயல் வடிவம் பெறுகிறது.

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த  மாணவர்கள் பயன்பெறுவர். இந்த பயிற்சிக்காக இணையதளம் வாயிலாக 73 ஆயிரம் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த திட்டமானது இந்தாண்டு 12&ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

100 பயிற்சி மையங்கள்

இப்பயிற்சி மையத்தினை, ஒன்றியத்திற்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக 412 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக 100 மையங்களில் இப்பயிற்சி தொடங்கப்படுகிறது. மிக விரைவில் மீதமுள்ள 312 மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணத்தையும் பெறாமல் 12&ம் வகுப்புக்கு பின் தொழில்சார் பட்டப் படிப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் பாடப் பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் பயிற்று மொழியிலேயே  சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு இந்த பாடங்கள் நடத்தப்படும். இதற்கான பாடப் பகுதிகள் மாணவர்களுக்கு 30 புத்தகங்களாக வழங்கப்படும்.

பயிற்சி நேரம்

பள்ளிகளில் பெறும் கல்விச் செயல்பாடுகளில் எவ்விதத் தேக்கமும் அடையா வகையில் மாணவர்களுக்கு  இந்த பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், பொதுத் தேர்வு முடிவடைந்த பிறகு தினந்தோறும் இதே நேரத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கொள்குறி வகை வினாக்களும் மற்றும் அதன் பாடப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் அனைத்திந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா?  என்ற கேள்வி நிறையவே எழுந்து கொண்டிருக்கின்றன.

சளைத்தது அல்ல

தற்பொழுது  உள்ள நம் மாநில பாடத் திட்டம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பாடத் திட்டத்திற்கும் சளைத்தது அல்ல. அத்தகைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நம் மாணவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி அளிப்பதே தற்போதைய தேவையாகும். அரசு அதற்கான அடித்தளத்தை மாணவா¦களுக்கு அமைத்துக் கொடுக்கிறது.  முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால் முன்னேறுவது உறுதி என்பதால்தான்  இன்றைய தினம் முறையான பயிற்சியை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுத்து இருக்கிறோம்.

மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி கட்டணமின்றி வழங்கப்பட உள்ளதால், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேறு எந்தப் பயிற்சியும் எடுத்துக் கொள்ள தேவையும் இல்லை, அதற்கென வேறு எந்த செலவினமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மாணவர்கள் எந்த நேரத்திலும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கே?  எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளைஉங்களுக்கு துணையாக அழைத்துச் செல்லுங்கள். உங்களை சறுக்கி விழாமல்  தாங்கிப் பிடிக்கும் தூண்களாக அவை செயல்படும்.

இலக்கினை நோக்கி

இலக்கினை நோக்கிய பயணம் எத்தகையது என்பது முக்கியமல்ல. நீ, உன் இலக்கினை நோக்கி, இடையூறுகளை தகர்த்து  எப்படி முன்னேறிக் கொண்டிருக்கிறாய்  என்பதே முக்கியம். அரசும், அதன் அங்கமாகிய ஆசிரியர்களும்  உங்களுக்கு நல்ல பாதையை மட்டுமே காட்ட முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்து முன்னேற உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு செயலை தொடங்கும் போதே, என்னால் முடியாது என நினைத்து தொடங்காதீர். என்னால் முடியாவிட்டால்  இந்த உலகில் வேறு யாரால் முடியும் என்ற எண்ணத்தில்  செயலைத் தொடங்குங்கள் வெற்றி நிச்சயம். எதையும் ஆழ்ந்து படிக்க கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறான ஆழ்ந்த கற்றலில் புரியாததை புரிந்து கொள்ளுங்கள். புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உயர வேண்டும்

உங்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வந்து, தமிழ்நாடு அரசால் அளிக்கப்படும் இந்தப் பயிற்சியின் துணை கொண்டு எதிர்வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நீங்களும் உயர்ந்து நம் தமிழ் சமுதாயத்தையும் உயர்த்திட வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், .எஸ்.மணியன், தங்கமணி, காமராஜ், சரோஜா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன ரெட்டி, எம்.சி.சம்பத், கே.சி.கருப்பண்ணன், வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

முதல்வர்  சொன்ன கதை

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிச்சியை துவக்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆண்டு பொதுத் தேர்வுக்கும், மாணவர்கள் கடினமாக நினைத்துக் கொண்டிருக்கும் போட்டி தேர்வுகளுக்கும் அப்படி என்னதான் வேறுபாடு என எண்ணிப் பார்த்த பொழுது, எனக்கு ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஊரில் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த  குரு ஒருவர் வாழ்ந்து வந்தார்.  அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட 3 மாணவர்கள், அக்குருவிடம் சீடர்களாக சேர வருகின்றனர். குருவினை வணங்கி, தங்கள் விருப்பத்தினை அவரிடம் தெரிவிக்கின்றனர்.

பொறுமையாக அவர்கள் கூறுவதை கேட்ட குரு, அவர்களிடம், நாளை வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைக்கிறார். பின், அவர் தன் மனைவியிடம், நாளை அந்தமாணவர்கள் வரும்போது, நேற்று இரவு குரு உறங்கி கொண்டிருந்த போது அவரின் காதில் ஓணான் ஒன்று  புகுந்து கடித்ததனால், குரு இறந்துவிட்டார் என்று தெரிவிக்குமாறு கூறுகிறார். அடுத்த நாள், அவர்களில் முதலாவதாக வந்த மாணவனிடம் குருவின் மனைவி, குரு சொன்னதை அப்படியே சொல்கிறார்.

அதைக் கேட்ட அம்மாணவன், .. அப்படியா, அவரின் ஜாதகப்படி  இந்த மாதத்தில் அவருக்கு ஒரு கண்டம் இருந்தது. அதனால்தான் அவர் இறந்து இருப்பார்  என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு திரும்பிச் சென்று விடுகிறான். சிறிது நேரத்தில் அங்கு வந்த 2 ம் மாணவனிடமும்  குருவின் மனைவி அதே செய்தியை கூறுகிறார். 2 ம் மாணவரும் ஒகுரு இறந்துவிட்டாரா, அவரிடம் கல்வி கற்க ஆவலுடன் இருந்தேன். சரி,  வேறு ஒரு குருவினைத் தேடி அவரிடம் கல்வி கற்றுக் கொள்கிறேன் என்று கூறி  திரும்பிச் சென்று விடுகிறார்.

மூன்றாம் மாணவனிடமும், அதே செய்தியை குருவின் மனைவி சொன்ன போது,  அந்த மாணவன் சற்று யோசித்துவிட்டு, மன்னிக்கவும், தாங்கள் பொய் சொல்வதாக  நினைக்கிறேன்.குரு இறப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறுகிறான்.  மறைவிலிருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த குரு,  ஆஹா,  நீயே சரியான மாணவன். உன்னை நான் என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்  என்றார்.

குருவின் மனைவி ஆச்சரியத்துடன், அந்த மாணவனைப் பார்த்து, குரு இறக்கவில்லை என்பதை நீ எவ்வாறு அறிந்தாய்? எனக் கேட்கிறார். அதற்கு அந்த மாணவன்,  தாயே, தங்கள் கணவர் இறந்ததாக தாங்கள் கூறிய போது உங்கள் முகத்தில்  எந்தவிதமான துக்கத்தின் சாயலையும்  நான் பார்க்கவில்லை. மேலும் ஒரு மனிதனின் காதில் ஓணான் நுழைவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே நுழைந்து கடித்தாலும் அதனால் உயிருக்கு  எவ்வித ஆபத்தும் வராது என்பதாலேயே,  குரு இறக்கவில்லை என்று நான், உறுதியாகக் கூறினேன் என்றான்.

இந்த கதையில் வரும் முதல் மாணவன்  தன் மதியை நம்பாமல், விதியை நம்பி  சென்று விடுகிறான். 2 ம் மாணவன், தான் கேட்ட செய்தியின் உண்மைத் தன்மையை அறியாமல்,  குருவின் மனைவி சொன்னதே உண்மை  என்று எண்ணி, குரு இறந்து விட்டார், இனி என்ன செய்வது? என்ற கேள்விக்கு  இறந்த மனிதரிடம் சீடராக சேர முடியாது. ஆகவே வேறு குருவை தேடிக் கொள்வோம் என்ற யதார்த்த சிந்தனையுடன் சென்று விடுகிறார்.

3ம் மாணவரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டபோது உடனே அந்த மாணவன், அந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிய ஏன்? எதற்கு? எங்கே?  எப்படி? எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளின் துணை கொண்டு பகுத்தாய்ந்து,  குரு இறக்கவில்லை, இறக்க வாய்ப்பில்லை  என்ற உறுதியான நிலைபாட்டினை  எடுக்கிறார் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here