Home சிறப்புச் செய்திகள் எடப்பாடி அ.தி.மு.க.வை உடைக்கும் பா.ஜ.க…!

எடப்பாடி அ.தி.மு.க.வை உடைக்கும் பா.ஜ.க…!

37
0
SHARE

ரெட்சன்… ரெட்சன்… யார் தாத்தா, 1000க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் வைத்திருக்கும் மெகா புள்ளி…? தி.மு.க.விலிருந்து, ம.தி.மு.க.வுக்கு தாவினார். ம.தி.மு.க.விலிருந்து மீண்டும் தி.மு.க.வுக்கு தாவினார். இப்ப எந்த கட்சியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. நம்ம துணை முதல்வர், வருமானவரி, அமலாக்கப்பிரிவு ரெய்டில் சிக்கிய மணல் மாபியா திருப்தி வெங்கடாஜலபதிக்கு நெருக்கமானவருக்கு நெருக்கமானவர்… என்று தாத்தா ஏதேதோ கூற இளைஞர்கள் புரியாமல் பேந்தப்பேந்த விழித்தனர்.

போங்க தாத்தா எங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லை.. என்ற இளைஞர்களை மேலும் அலைக்கழிக்காமல் இப்போ புரியுதான்னு பாருங்க… என்ற தாத்தா, சேகரான ரெட்டி என ஆரம்பிக்க … இப்ப தெரியுது தாத்தா என்றனர் இளைஞர்கள்.

ரெட்சன் வருமானவரித்துறை வளையத்திற்குள் சிக்கி உள்ளார். போயஸ்கார்டன் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போயஸ்கார்டனில் எதற்கு வருமான வரித்துறை ரெய்டு நடத்த வேண்டும். வேடிக்கையாக உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களில் சிலர், அவர்கள் வேலை செய்யும் பணிமனைக்கு, காலை, 8.30 மணிக்கு வந்து கையெழுத்திடுகின்றனர். பின், சபாரி உடையுடன், ஜெ., வாழ்ந்த, போயஸ் கார்டன் இல்லம் செல்கின்றனர். கார்டனில், இரண்டாவது மாடியில் உள்ள, ஒரு அறையின் பாதுகாப்பில், இவர்கள் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. வீட்டின் மொட்டை மாடிகளில் நின்று, அங்கு வந்து செல்வது யார் என்றும், கண்காணித்து வருகின்றனர். இந்த வேலைக்கு, இவர்களை செல்ல அறிவுறுத்தியது யார் என, தெரியவில்லை. அவர்களிடம், நிறைய பணம் புழங்குகிறது என்பது மட்டும் உண்மை; வட்டிக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர்.

   போக்குவரத்து ஊழியர்கள், 10 மாதங்களாக, அங்கு பணிக்கு செல்வது, நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியும்; அவர்கள் கண்டு கொள்வதில்லை. ஒரு அறைக்கு மட்டும், சிறப்பு பாதுகாப்பு கொடுப்பதன் பின்னணி மர்மமாக உள்ளது.  ‘தொழிற்சங்க பணி, கட்சி பணி என, சிலர் வெளியில் செல்வது வாடிக்கை. போயஸ் கார்டனுக்கு பணிக்கு செல்வது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று அதிகாரிகள் புலம்புகிறார்கள்… நாமும் புலம்பிக்கொண்டே இருப்போம், என்றார்,  தாத்தா கிண்டலாக..

பா.ஜ.கவும் எடப்பாடி, ஒ.பன்னீர்செல்வம் அணியினரின் அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்..  மதுரை, விருதுநகர்,ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள, அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்களை இழுக்க, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தலைமையில், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், மாநில தலைவர், தமிழிசை சவுந்தர ராஜன் இடம் பெற்ற, குழு அமைக்கப்பட்டு உள்ளது.

   சமீபத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில், நெல்லை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலர், பா.ஜ. தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, பா.ஜ.வில் இணைந்தனர். அவரை தொடர்ந்து, அதே மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஒருவரும், பா.ஜ.,வில் இணைகிறார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, சமீபத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதரராவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.  இதைத்தொடர்ந்து, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகி களுடன், பா.ஜ.வில் இணைய அவர் தயாராகி  வருகிறார். இதேபோன்று, மேலும் பலரும், பா.ஜ.,வில் இணைய திட்டமிட்டு பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து வருகிறார்கள்..இதையறிந்த, முதல்வர் பழனிசாமி, ‘அவசரப் பட வேண்டாம்’ என, அவர்களிடம் கெஞ்சி வருகிறார்..

  திருச்சியில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம், முகையூர் தொகுதியின், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன், ஆதரவாளர்கள், 47 பேருடன், மத்திய அமைச்சரை சந்தித்து, பா.ஜ.,வில் இணைந்தார். இது தவிர, பா.ம.க.,வில் இருந்தும், 69 பேர் இணைந்தனர். பா.ஜ.க. எப்படியாவது தமிழ்நாட்டில் கால் பதிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறது.. பா.ஜ.க.வில் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு நெல்லையில் ஆதரவாளர்களே கிடையாது, டம்மி ஆட்கள் மட்டுமே பா.ஜ.க.வில் சேருகிறார்கள், பாவம் முரளிதரராவ்..

தி.மு.க. தலைவர் கருணாநிதியை, சரத்குமாரும், ராதிகாவும் சந்தித்தார்கள்..சரத்குமார் தி.மு.க.விலிருந்து விலகும் போது எழுதிய கடிதத்தை பார்த்து, கருணாநிதி கண் கலங்கியபடி துரோகி என்றார். இன்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.ஆனால் தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன், கட்சிக்காக உழைத்தவன், கட்சிக்காக சொத்தை வித்து, நடுத்தெருவில் நின்றவன், கருணாநிதியை பார்க்க முடியவில்லை. பணம் பத்தும் செய்யும்… என்று தாத்தா விரக்தியில் பேசினார். தாத்தாவை புலம்பவிட்டுவிட்டு இளைஞர்கள் நைசாக ஒவ்வொருவராக நழுவ ஆரம்பித்தனர்.