Home தலையங்கம் தங்கமும், வைரமும் சாட்சி..!

தங்கமும், வைரமும் சாட்சி..!

37
0
SHARE

வருமான வரித்துறை என்றால் என்ன?, அதன் செயல்பாடுகள் யாவை? என்பது குறித்து பலருக்கும் (படித்தவர்கள் உள்பட) சந்தேகம் உள்ளது. பலருக்கு வருமான வரி ரிட்டன் என்றால் என்ன என்பது கூட தெரியவில்லை. இதெற்கெல்லாம் பொதுமக்களின் அறியாமை ஒரு காரணமாக இருந்தாலும், திசை திருப்பும் அரசியல்வாதிகளும் பிரதான காரணமாகி விடுகின்றனர்.

இதுபோன்ற ‘வதந்தி வாதி’களுக்கு சில பதிலடிகளை கொடுப்பது அரசின் தலையாய கடமை. இதனை அப்படியே விட்டு விடக்கூடாது. மற்றொருபுறம், வருமான வரித்துறையினர் இது பற்றிய விழிப்புணர்வுகளை அடிமட்ட குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டிய தலையாய கடமை.

வருமான வரி கட்ட உங்களுக்கு வருமானம் இருக்கவேண்டும். வருமானம் இல்லாதவர்கள் வருமான வரி கட்டவேண்டியதில்லை. இந்த உண்மை அந்த பெயரிலிருந்தே உங்களுக்கு விளங்கியிருக்கவேண்டும். நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, வருமானம் பெறுகின்ற ஒரு தனி நபரரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவீதத்தை நாட்டுக்கு வரியாக செலுத்த வேண்டும்.

இவ்வரி, ‘வருமான வரி சட்டம்’ எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வருமான வரியை இத்துறையிடம் செலுத்த வேண்டும். இதுவே வருமான வரி செலுத்துதல் (பைலிங்) எனப்படும்.

வருமான வரி திரும்ப பெறுதல் (ரிட்டர்ன்) என்பது, சில சேமிப்புகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனடிப்படையில் ரிட்டர்ன் கொடுக்கப்படுகிறது. வருமான வரிதுறை சோதனை எனபது, வருமான வரிச் சட்டம் பிரிவு 276 சி.சி.ன் படி, உரிய காலத்தில் வருமானவரி படிவம் தாக்கல் செய்யவில்லை எனில் ஒரு லட்சம் ரூபாய் அபராத தொகை செலுத்துவதுடன், வருமான வரித் துறையின்ர் மேற்கொள்ளும் குற்ற நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும்.

வருமான வரித்துறைக்கு ஆண்டு தோறும் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கும், உண்மையான வருவாய்களை வருமான வரி படிவத்தில் காட்டாது வருமான வரியை செலுத்த தவறும் நபர்களுக்கும் வருமானவரிச் சட்டப்பிரிவு 271பிஇன் படி ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் குற்ற வழக்கும் பதிவு செய்யப்படும்.

இதுபோன்ற ஆசாமிகளை கண்டறியவே வருமான வரித்துறையினர் திடீர் திடீர் சோதனைகள் நடத்துகின்றனர். ஆனால் இந்த சோதனைகளை நடக்கும்போது, ஆளும் கட்சியினர் மீது குற்றம் சுமத்துவது எதிர் கட்சிகள் உள்பட உதிரி கட்சிகளின் இயல்பாக உள்ளது. இவர்களுக்கு கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது, இதே போன்று நடந்து கொண்டீர்களா? ஆம் என்றால் நீங்கள், மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

ஏனென்றால் மக்களை சிந்திக்க விடாமல் திசைதிரும்பும் உங்களின் செயல் எதிர்கால, நாட்டின் வளர்ச்சியை கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8&ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். அதன்பின்னர், கருப்பு பண முதலைகள், தங்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ள போலி நிறுவனங்களை தொடங்கி உள்ளனர்.

இதுபோன்ற நிறுவனங்களை கண்டுபிடிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் உள்ள சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் இதுவே சூத்திரமாக அமைந்து உள்ளது. சுயமாக, தன்னாட்சியுடன், ஆதாரத்துடன் சோதனை நடந்து வருவதற்கு, சோதனையில் சிக்கிய தங்கமும், வைரமும், ஆவணங்களுமே சாட்சி.