Home அரசியல் தினகரன் ஆதரவாளர்களை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்தப்படுவது ஏன்?  திருமாவளவன் கேள்வி

தினகரன் ஆதரவாளர்களை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்தப்படுவது ஏன்?  திருமாவளவன் கேள்வி

10
0
SHARE

சென்னை, நவ. 14& தினகரன் ஆதரவாளர்களை மட்டும் குறி வைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுவது ஏன் என்று திருமாவளவன் கேள்வி விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:

வருமான வரித்துறை எந்த நேரத்திலும் சோதனை நடத்த அதிகாரம் பெற்று இருக்கிறது. ஆனால் அரசியல்வாதி வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தும் போது அது சர்ச்சைக்குள்ளாகிறது. அந்த அடிப்படையில் தான் தினகரன் தரப்பினர் மீதும் வருமானவரி சோதனை நடத்தப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக விவாதிக்கப்படுகிறது.

பெரும்பாலும் மத்தியில் ஆளும் கட்சி தரப்பினர் மற்றும் ஆளும் கட்சிக்கு ஆதரவாளர்கள் மீது இவ்வாறான சோதனைகள் நடத்தப்படுவது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பது உண்டு. தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் இரு தரப்பினர் தனித் தனியாக இயங்குகின்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளனர். தினகரன் தரப்பினர் ஆதரவாக இல்லை.

இந்நிலையில் தினகரன் தரப்பினரை மட்டும் வருமான வரித்துறையினர் சோதனைக்கு உட்படுத்துவதால் இதுஅரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை வெளிப்படுத்துகிறது. தொடர்து 3, 4 நாட்களாக இந்த சோதனைகள் நடக்கின்றன. ஏறத்தாழ 200 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடப்பதால் அவர்களை அச்சுறுத்தி பணிய வைப்பதற்கான முயற்சி என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் அரசியல்வாதிகள் மீது நடத்தப்படுகின்ற சோதனைகள் ஏதோ ஒரு கட்டத்தில் சமரசம் செய்யப்படுகிறது. அடுத்த கட்டமாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் இருப்பதில்லை.

தினகரன் தரப்பினர் மீது நடத்தப்படும் இந்த பரபரப்பான சோதனைகளும் ஓரிரு நாள் சோதனையாக அடங்கி விடும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் பார்க்காமல் நேர்மையாக வருமான வரித்துறை செயல் படுமானால் கருப்பு பணத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். ஆளும்கட்சிக்கு நெருக்கமாக இருக்கின்ற தொழில் அதிபர்கள், பெரும் வணிகர்கள், நண்பர்கள் போன்றவர்கள் மீது ஒரு போதும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்ததாக சான்றுகளே இல்லை.

எனவேதான் தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை நடவடிக்கைகளை நாம் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது. தினகரன் தரப்பினருக்கு இது மேலும் மக்களிடையே ஆதரவை திரட்டி தருவதற்கு ஏதுவாக அமையும் என்று தான் பொதுமக்கள் இடையே பேச்சு நிலவுகிறது. வருமான வரித்துறை, மைய புலனாய்வு துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சியினர் மற்றும் வேண்டாதவர் மீது ஏவுகின்ற போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அமைப்புகளை பயன்படுத்துவதால் அவற்றின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.

இந்த அமைப்புகளை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் ஆளும் கட்சியினர் மற்றும் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் செயல்படுவதற்கும் உண்மையில் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும். ஜி.எஸ்.டி. கவுன்சில் அண்மையில் கூடி விவாதித்து நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு வரி விதிப்பு சதவித அளவை குறைத்துள்ளது. 28 சதவீத வரி விதிக்கப்பட்ட ஏராளமான பொருட்களுக்கு 18 சதவீதமாகவும், 12 சதவீதமாகவும் குறைத்துள்ளனர். இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது.

ஆனால் இந்த பொருட்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்ட போதே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அப்போது செவி சாய்க்கவில்லை. வரி விகிதத்தை கூட்டி அறிவித்து விட்டு தற்போது குறைத்து இருப்பது பொது மக்கள் இடையே நற்பெயரை பெற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்பட்டதாக தெரிகிறது. எப்படியாயினும் இது வரவேற்க தகுந்ததே. எனினும் அயல்நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 4 அல்லது 5 அடுக்குகளாக அமையவில்லை. ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளில் அமையும் வகையிலும் அதிகபட்சம் 15 சதவிகிதமாகவும் தான் உள்ளன.

எனவே இந்தியாவிலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மேலும் பல சீர்திருத்தங்களை அயல்நாடுகளில் உள்ளது போல கொண்டு வர வேண்டும். குறிப்பாக சாதாரண மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு வரிச்சுமை இல்லாமல் இந்திய அரசு புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here