Home தமிழகம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை அனுமதிக்கக் கூடாது ராமதாஸ் முகநூல் பதிவு

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை அனுமதிக்கக் கூடாது ராமதாஸ் முகநூல் பதிவு

12
0
SHARE

சென்னை, நவ. 14& சென்னையில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை இரவுகளில் பணக்காரர்கள் மது அருந்திவிட்டு ஏற்படுத்து விபத்து அதிகரித்து வருகிறது. இதை மையப்படுத்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முகநூலில் சனிக்கிழமை இரவுகளும், சாலைப் பயண அச்சங்களும் எனற தலைப்பில் பதிவு ஒன்று செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தானிகள் மீது குடிபோதையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த  மகிழுந்து மோதியதில் பல ஆட்டோக்கள்  சேதமடைந்தன. 6 ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. ஒரு ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 5 ஓட்டுனர்கள் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கொடிய விபத்துக்குக் காரணமானவர்கள் சென்னையில் உள்ள கட்டுப்பாடு மிக்க கல்லூரியின் மாணவர்கள் ஆவர். அக்கல்லூரியின் மாணவர்களே குடித்து விட்டு போதையில் வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சென்னையில் இப்போது வார இறுதி கொண்டாட்டங்கள் என்ற புதியக் கலாச்சாரம் உருவாகி வருகிறது.

சனிக்கிழமை இரவுகளில் நட்சத்திர விடுதிகளில் மது அருந்தி கூத்தடிப்பதும், பின்னர் அதே போதையில் வாகனங்களை ஓட்டி சாலையோரம் வசிக்கும் மக்கள் மீதும், ஆட்டோக்கள் மீதும் மோதி உயிரிழப்புகளை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. கடந்த செப்டம்பர் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பெண் மது போதையில் வேகமாக மகிழுந்தை ஓட்டி வந்து சாலையோரம் நின்ற கூலித் தொழிலாளி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இத்தகைய விபத்துக்களால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவுகளில் சாலைகளில் பயணம் செய்யவே அச்சமாக உள்ளது. பணக்காரக் குடும்பத்தினர் தங்களின் மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காகவும் மது அருந்தி விட்டு சாலையோரம் வசிக்கும் அப்பாவிகளையும்,  சாலையில் பயணிக்கும் ஏழைகளையும் மகிழுந்தை மோதி கொலை செய்வதை இனியும் அனுமதிக்கக்கூடாது. சாதாரண சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஏழைகளை துரத்திப் பிடித்து தண்டிக்கும் காவல்துறை, இத்தகைய குற்றங்களைத் தடுக்கவோ, அதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன்வருவதில்லை.

அரசு மதுக்கடைகளின் விற்பனை நேரம் இரவு 10 மணி வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை நடைபெறுகிறது. பல நட்சத்திர விடுதிகளில் காவல்துறை உதவியுடன் விடிய, விடிய மது ஆறாக ஓட அனுமதிக்கப்படுகிறது.

வசதி படைத்தவர்களின் கொண்டாட்டங்களுக்காக அப்பாவிகள் உயிரிழப்பது தொடர் கதையாவதை அனுமதிக்கக்கூடாது. எனவே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மது விருந்துக் கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும். கல்லூரி மாணவர் குடிபோதையில் ஓட்டிய கார் மோதி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதை அந்த விபத்தை ஏற்படுத்தியவரின் குடும்பத்திடமிருந்து வசூலித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here