Home தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் இருந்தால் நாங்களும்...

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் இருந்தால் நாங்களும் கலந்து கொள்வோம்முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி

42
0
SHARE

சென்னை, நவ. 13&

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் நீட் தேர்வில் விலக்கு பெறும்வரை உண்ணாவிரதம் இருப்போம் என கூறினால் நாங்களும் அதில் கலந்துகொள்வோம் என  முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்த£ர்.

கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்க்கொள்ளல் என்ற தலைப்பில் சென்னையில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர்கள் அனில் சட்கோபால், ஹரகோபால், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், முன்ளாள் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் கூறியதாவது:

கல்வியை அடிப்படை உரிமையாக்கிவிட வேண்டும் என்பதே அம்பேத்காரின் லட்சியம். ஆனால் இன்றைய தேதிவரையில் அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பைத் தரக்கூடிய பொதுப்பள்ளி முறையை நாம் உருவாக்கவில்லை. அவரவர் பொருளாதாரநிலைக்கு ஏற்றார்போல் கல்வி கற்கும் சூழல் உருவாகி உள்ளது. பல அடுக்கு கல்விமுறையில் பாகுபாடு உள்ளது.

கல்வித்துறையில் உள்ள பாகுப்பாட்டின் மூலம் அனைத்து மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்வி இடங்களுக்கும் ஒரே தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது எந்தவகையிலும் நியாயமாற்றது. தகுதியில்லை, திறமை இல்லை என்பதால் போட்டியிட வேண்டாம் என கூறவில்லை. வாய்ப்பு சமமாக இல்லை என்பதாலேயே இத்தகைய போட்டி கூடாது என கூறுகிறோம்.

இந்தியாவில் தற்பொழுது உள்ள சூழலை கருத்தில் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைத் தேர்வு முறையான நீட் விலக்கி கொள்ளப்பட வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தசட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என கூறியிருந்தாலும், ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசால் நிறுவப்பட்ட மருத்துவ நிறுவனங்களுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வில் இருந்து எவ்வாறு விலக்களித்ததோ, அதேபோல் தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவம், பல்மருத்துவக் கல்லூரிகளுக்கும் விலக்களிக்க வேண்டும்.

இந்திய அரசமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கி உள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் , நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையிலும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு 2017 பிப்ரவரி 18ந் தேதி அனுப்பி வைக்கப்பட்ட இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான 2 சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும். இந்த தீர்மானம் பிரதமரிடம் அளிக்கப்படும்.

பொது நுழைவுத் தேர்வு என்பது படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு 3 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். அதில் தேர்ச்சி பெறாத பிற மாணவர்களின் சூழல் எவ்வாறு இருக்கும். நீட் நுழைவுத் தேர்வு பள்ளிக்கல்வியின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்கள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது நீட்டிற்கு மட்டுமே மாணவர்கள் படிக்கும் நிலை உருவாகி உள்ளது.

அரசாங்கம் நீட்டிற்கு பயிற்சி கொடுப்பது தீர்வல்ல.நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் தீர்வாகும். ஏற்கனவே விலக்கு பெறுவதற்கு சட்டம் கொண்டு வந்த மாநில அரசு அதனை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மறைந்த முதல்வர்  ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து நீட் தேர்வில் விலக்கு பெறும்வரை போராடுவோம் என கூறினால், அந்த சட்டத்திற்கு துணையாக இருந்தவர்கள் உட்பட அனைவரும் மெரினாவில் மீண்டும் அமர்ந்து நீட் தேர்விற்கு விலக்கு பெற முடியும் என நினைக்கிறோம்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கும், நிலங்களை கையகப்படுத்தினால் நஷ்டஈடு வழங்குவதற்கான சட்டமசோதாவிற்கு அனுமதி அளித்தது போல் நீட் தேர்விற்கும் விலக்கு பெற்றுதர வேண்டும். மேலும் பல நிகழ்வுகளின் போது மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் மத்திய அரசிற்கு எதிராகவும், தமிழகத்தின் உரிமைக்காகவும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர்  என தெரிவித்தனர்.