Home தலையங்கம் ஐ.டி. ரெய்டைபாரபட்சமின்றி தீவிரப்படுத்த வேண்டும்

ஐ.டி. ரெய்டைபாரபட்சமின்றி தீவிரப்படுத்த வேண்டும்

10
0
SHARE

இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வருமானம் பெறுகின்ற தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி வருமான வரி சட்டத்தின் கீழ் இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது.

வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சம் வரை ஆகும். இதற்கு மேல் ஒரு ரூபாய் இருந்தாலும் கூட வரி செலுத்த வேண்டும். இந்த உச்ச வரம்பில் சில விதிமுறைகளும் உள்ளன. ஆனால் வரி ஏய்பு செய்பவர்கள் போலி கணக்குகளை தாக்கல் செய்யத்தான் செய்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும்பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாயைப் பிழக்கும் என்பது என்பதை பலரும் உண்மையாக்குகின்றனர். முறையாக வரியை செலுத்துவது கிடையாது. கையில் இருக்கும் பணத்தை வரியாக செலுத்தும் எண்ணம் ஒரு சில சமுதாய சிந்தனை படைத்தவர்களுக்கே உதிக்கிறது. அவர்கள் முறையாக வரியை செலுத்திவிடுகிறார்கள். இவர்களை தவிர மற்றவர்கள் வரி ஏய்ப்பு செய்து பணத்தை பதுக்கி வைக்கிறார்கள். பணம் படைத்த பெரும் புள்ளிகள் பினாமிகளை உருவாக்கி கருப்பை வெள்ளையாக்க துடிக்கின்றனர்.

கருப்பு பணத்தை எப்படியாவது ஒழித்தே தீருவோம் என்று கங்கனம் கட்டிய மத்திய பா... அரசு, பண மதிப்பிழப்பு என்ற ஒன்றை நாடு முழுவதும் கொண்டு வந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இந்த அதிரடி நடவடிக்கையால் பணம் படைத்த பெரும் புள்ளிகளின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது. இதற்கு அடுத்ததாக மத்திய அரசின் அஸ்திரம் தான் ரெய்டு. மத்திய அரசின் இந்த அஸ்திரம் அதிபயங்கர வேகத்தில் பாயத்தொடங்கிவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்திலேயே புகுந்தது வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு காரணமாக அமைந்தவர் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ். இதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி அதிரடி சோதனை நடந்தது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இப்போது சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள் என்று வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். 4 நாட்களாக இந்த ரெய்டு நடந்தது. இதில் சுமார் 1800 அலுவலர்கள் ஈடுபட்டனர். இந்த அதிரடி ரெய்டில் ரூ. 1500 கோடி பணப்பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்று அனைத்து அதிகாரிகள், முக்கிய புள்ளிகள் என்று பாரபட்சமின்றி வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு வருமான வரித்துறையினர் நேர்மையாகவும், திறம்படவும் செயல்பட அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வரி ஏய்ப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும். பணம் படைத்தவர்கள் இதில் இருந்து தப்பிக்காத வகையில் இந்த சட்டம் இருக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தினால் நம் இந்தியாவில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது.