Home தமிழகம் வாயலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வு மையம் வேண்டும்: பெற்றோர் ஆசிரியர் கழகம்...

வாயலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வு மையம் வேண்டும்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

38
0
SHARE

கல்பாக்கம், நவ. 12&

வாயலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு  மையம் அமைத்திட வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதை கடந்த ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி பள்ளி கல்வி துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் சிறப்பாளராக கலந்துகொண்டு கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிலையில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் அதன் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆறுமுகம், புதுப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவர் எம். காதர்உசேன், முன்னாள் வாயலூர் ஊராட்சித் தலைவர் அப்துல்உசேன், உதவி தலைமையாசிரியை எழில்பாவை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளித் தலைமையாசிரியை ஹேமாவதி அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், திருப்போரூர் தொகுதி முன்னாள் எம்.எல்..வுமான ம.தனபால் கலந்துகொண்டார்.

இதில், வாயலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கென தனியாக சத்துணவு மையம் அமைத்திட வேண்டும். 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரசு பொதுத்தேர்வு எழுதிட, இப்பள்ளியிலேயே தேர்வுமையம் அமைத்திட வேண்டும். பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைத்துத் தரவேண்டும். காலியாக உள்ள பள்ளி எழுத்தர் பணிக்கு ஊழியரை நியமனம் செய்யவேண்டும். பள்ளிக்கு, மேலும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே சிறப்புரையாற்றிய ம.தனபால், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். உதவி தலைமையாசிரியை பூர்ணசந்திரா, தமிழ் பேராசிரியை கீதாலட்சுமி, ஆசிரியர்கள் சரஸ்வதி, வடிவேல், நிர்வாகிகள் பாபு, வசந்த், பொன்மனோகர், அர்ஜுனன், லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.