Home தலையங்கம் இன்னும் எத்தனை ஆண்டு தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… 

இன்னும் எத்தனை ஆண்டு தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… 

7
0
SHARE

பருவமழை என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வு ஆண்டுதோறும் தனது கடமையை செய்து கொண்டுதான் இருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் சேதமடைந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டும் வருகிறது. இது காலா காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வாகவே உள்ளது.

ஆனால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டார்களா என்றால் அது கேள்விக்குறியே…? பருவ மழை பெய்யும் என்பது முன்கூட்டியே தெரிந்த விஷயம் தானே. ஆனால் மாநகராட்சி சாலை விஷயத்திலும் அஜாக்கிதரதையான போக்கையே கடைப்பிடிப்பதை ஆண்டுதோறும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சாதாரணமாகவே குண்டும், குழியுமான தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கும் போது அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், அரசியல்வாதிகள் என்று பாகப்பிரிவினை முடிந்து சொச்சம் தொகையிலேயே சாலைகள் அமைக்கப்படுகிறது. இந்த சாலைகள் ஒரு மாதத்திற்கு கூட தாக்குப்பிடிப்பது கிடையாது. இதனால் கஷ்டப்படுவது யார்? வாகன ஓட்டிகளும், கர்ப்பிணி, நோயாளிகள், பள்ளி குழந்தைகள் தான்.

பருவமழை வந்தால் சாதாரண மக்கள் தான் அவதிப்படுவார்கள். அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ சந்தோஷமாகிவிடுவார்கள். சேதங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாதியை ஆட்டை போட்டுவிடலாம் என்பதே அவர்கள் சந்தோஷத்துக்கு காரணமாகிவிடுகிறது. அவர்கள் மக்கள் நலனுக்காகவா பணியாற்றுகிறார்கள். அவர்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமே என்று தான் நினைக்கிறார்கள்.

இப்படி பருவமழை பெய்யும் போது சேதமடையும் சாலைகளுக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதியில் பாதி பங்கு கூட சாலைகளுக்கு செலவிடப்படுவதில்லை. இது அனைத்து அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும். பணத்தாசை யாரை விட்டது. இந்த அவஸ்தை போதாதற்கு குடிநீர் குழாய் பணி, மின்வாரிய பணி என்று புதிதாக போடப்பட்ட சாலைகளும் அடிக்கடி தோண்டப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 471 பேருந்து சாலைகள் உள்ளன. இவற்றில் 400 சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டவை. குடிநீர் குழாய் பதிப்பு பணி, மின்வாரியமும் தோண்டிய பள்ளம் மற்றும் மழை நீர் வடிகால்வாய்க்காலுக்காக ஒடைக்கப்பட்ட சாலை என்று 70 சாலைகள் சேதமடைந்தாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றிற்கான சேத மதிப்பீடு ரூ.34 கோடி என்று தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016&17ம் ஆண்டு  மாநகராட்சி பட்ஜெட்டில் சாலைகளுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சியில் சாலைகளுக்கு ரூ. 2,170.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க ரூ.415 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2015&16ம் நிதி ஆண்டில் பேருந்து வழித்தட சாலைகள், உட்புற தார் சாலைகள் மேம்பாட்டுக்காகவும், சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கவும் ரூ.1,232 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மழைநீர் வடிகால் வாய்கள் அமைக்க ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிகளை முழுமையாக பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளனவா? மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளனவா? இதை ஆய்வுதான் செய்ய வேண்டும். இவ்வாறு மக்களின் வரிப்பணம் எந்த அளவுக்கு மக்களின் நன்மைக்காக சென்றடைகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. சாலைக்காகவும், மழை நீர் வடிகால்வாய் பணிக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக பயன்படுத்தப்பட்டு தரமான பணிகள் நடக்கின்றனவா என்பதை பறக்கும் படை என்ற புதிய அப்பழுக்கற்ற குழுவை அமைக்க வேண்டும்.

இதுமட்டும் இன்றி தரமான கட்டுமான பொருட்கள் வாங்கப்படுகிறதா என்பதையும் அதிரடியாக ஆய்வு செய்ய வேண்டும். தவறிழைக்கும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும். அப்படி முறைப்படி நடந்தால் எத்தனை நாட்கள் மழை பெய்தாலும் சென்னையை அசைக்க கூட முடியாது….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here