Home சுடச்சுட 178 பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்படுகிறது 50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜி.எஸ்.டி. நவம்பர்...

178 பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்படுகிறது 50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜி.எஸ்.டி. நவம்பர் 15&ம் தேதி அமலுக்கு வருகிறது

18
0
SHARE

பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது 178 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதம் குறைக்கப்படுகிறது. அதோடு சிகரெட் உட்பட 50 பொருட்களுக்கு மட்டுமே இனி 28% ஜி.எஸ்.டி என 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு நவம்பர் 15&ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

கவுகாத்தி, நவ. 11&

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒரே வரி என்ற அடிப்படைக்கு இதனால் மாறியது. ஜி.எஸ்.டி. 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. அதிலும் சில சொகுசு பொருட்களுக்கு ஜி.எஸ்.டியுடன் கூடுதலாக செஸ் என்ற வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பிலுள்ள குறைகளை சீர் செய்ய மாதம் தோறும், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.தங்கள் மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை நிதி அமைச்சர்கள் எடுத்துரைத்து விவாதிப்பார்கள். இறுதியில் அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். பரிசீலிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும், அல்லது அடுத்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சர் கூறுவது வழக்கம் இந்தநிலையில், ஜி.எஸ்.டி கவுன்சிலின் 23வது கூட்டம் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதேபோல பிற மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.கூட்டத்தின் இடைவெளியில், பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி நிருபர்களிடம் கூறுகையில், மொத்தம் 50 பொருட்களை மட்டுமே 28 சதவீத வரி விதிப்பு வரம்பிற்குள் வைத்திருக்க  ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அவையும் கூட ஆடம்பர பொருட்கள்தான்.சூயிங்கம், சாக்லேட், ஆப்டர் ஷேவ் லோஷன், வாசனை திரவியங்கள், வாஷிங் பவுடர், டிட்டர்ஜென்ட், மார்பிள் ஆகியவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டு 18 சதவீத ஜி.எஸ்.டியாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். குஜராத்தில் வணிகர்கள் அதிக அளவு உள்ளனர். அவர்கள் ஜி.எஸ்.டியில் விதிக்கப்பட்ட அதிக வரி விதிப்பால் பா.ஜ.க மீது கோபத்தில் உள்ளனர். குஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய அரசு ஜி.எஸ்.டியை  குறைக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.

முன்பு 223 பொருட்கள் 28 சதவீத உச்சபட்ச வரி விதிப்பு வரம்பில் இருந்தன. இப்போது 178 பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டு, வெறும் 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி வரம்புக்குள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சிகரெட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆடம்பர பொருட்கள் மட்டுமே அடங்கும். சிறு தொழில்களுக்கு குறைவான ஜி.எஸ்.டி  விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என மாநில அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த வரி குறைப்பு நவம்பர் 15&ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.