Home தலையங்கம் திருந்துகிறதா மத்திய அரசு ?

திருந்துகிறதா மத்திய அரசு ?

13
0
SHARE

நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டது. பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு பெயரே ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையை கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் வரி விலக்கு லாபங்களை பார்த்து அந்த பகுதிகளில் தொழில் தொடங்காமல், தங்கள் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் நிறுவனங்களை தொடங்க முடியும். நிறுவனங்கள் இடையே ஆரோக்கிய போட்டி அதிகரிக்கும். 5, 12, 18, 28 என நான்கு சதவீதங்களாக இந்த வரிவிதிப்பு பிரிக்கப்பட்டது.  இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதகம் அதிகம் இருக்கும் என்று வணிகர்கள் கருதினார்கள். எனவே இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜி.எஸ்.டி. விதிப்புக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இதையடுத்து ஜி.எஸ்.டி. குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் சில பொருட்களுக்கு 28 சதவீதம், 18 சதவீதம் என்கிற உயர்ந்த வரி விதிப்பை வணிகர்களும், மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசை குறை கூறி வந்தனர். சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கியது.

ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி அசாம் மாநிலம் கவுகாத்தியில் 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 177க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 58 இனங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளைபொருட்கள் சேமிப்பு கட்டமைப்புக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்களுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தொடர்பான சாதனங்கள் 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக கொண்டு வரப்படுகிறது. நியாய விலைக்கடைகளுக்கான சேவை வரியில் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைக்கப்படுகிறது. மொத்தம் 150 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.  50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஷேவிங் கிரீம், ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான வரியை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முதலில் ஜி.எஸ்.டி. விதிப்பால் மக்களிடம் கெட்ட பெயரைத்தான் மத்திய அரசு சந்தித்தது. ஆனால் தப்போது நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்க தக்கது தான். இதுபோன்ற வரிகள் குறைப்பால் பொருட்கள் விலையும் குறையும் என்பது தெரிகிறது. ஏழை, நடுத்தர மக்கள் இதனால் பயனடைவார்கள். அதிக வரிப்பணம் என்னும் சுமை குறையும். இதேபோல் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களுக்கு படிப்படியாக வரி குறைந்தால் மத்திய அரசின் செயலை மக்கள் மறக்கமாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here