Home சுடச்சுட சென்னை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு உட்பட சசிகலா, தினகரன் வீடு, அலுவலகங்களில் சோதனை 187 இடங்களில்...

சென்னை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு உட்பட சசிகலா, தினகரன் வீடு, அலுவலகங்களில் சோதனை 187 இடங்களில் அதிரடி

12
0
SHARE

நூறு கோடிக்கு மேல், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லியில் உள்ள சசிகலா, தினகரன் ஆகியோரின் இல்லங்கள், நிறுவனங்கள், ஆதரவாளர்களின் வீடுகள் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லமும், கொடநாடு பங்களாவும் தப்பவில்லை.

சென்னை, நவ.10&

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சசிகலா, அ.தி.மு.க.வை தனது வசமாக்கினார். பின்னர், பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர் ஆனார். முதல்வர் ஆக ஆசைப்பட்ட சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது, சசிகலா, டி.டி.வி.தின கரனை , துணை பொதுச்செயலாளராக ஆக்கினார். சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலில், ஓ.பன்னீர்செல்வம், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இரட்டை இலை முடக்கம்

அப்போது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். பின்னர்,  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி ஒன்றானது. டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப் பட்டனர். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டி.டி.வி.தினகரன் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வருமான வரி சோதனை

இந்த நிலையில், தமிழகம் முழுவதும், சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடியாக , காலையிலேயே சோதனை நடத்தினர். பல்வேறு குழுக்களாக பிரிந்து, அவர்கள் இந்த சோதனையை நடத்தினர். சென்னை, ஈக்காட்டு தாங்கல் பகுதியில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், நமது எம்.ஜி.ஆர்.  நாளிதழ் என அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தப்பட்டது.

சசிகாலவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமா

நிறுவனத்தில், 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை போட்டனர். சோதனை நடந்த இடங்களில், போலீசார் குவிக்கப்பட்டனர். தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் பத்திரிகை அலுவலகத்திலும், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெசன்ட் நகர் பகுதியில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டி.டி.வி. தினகரன் வீட்டில் இருந்தார்.

ஜெயா டி.வி. அலுவலகம்

வேளச்சேரி ஜாஸ் சினிமா அலுவலகத்தில், கணக்கு வழக்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மகாலிங்க புரத்தில் உள்ள ஜெயா டி.வி.யின், தலைமை செயல் அதிகாரியும், இளவரசியின் மகனுமான விவேக் வீடு, தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் விஷ்ணு பிரியா இல்லம் மற்றும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள டாக்டர் வெங்கடேசன் வீடு, மன்னார்குடி , கந்தவர் கோட்டையில் உள்ள சசிகலா அண்ணன் மகன் திவாகரன் வீடு, அவருக்கு சொந்தமான செங்கமலம் தாயார் கல்லூரி அலுவலகம், ஆதரவாளர்கள் முன்னாள் கவுன்சிலர் ராகவபிள்ளையின் வீடு, வேலூரில், கார்த்திகேயன் வீடு, வடூரில், அக்ரி ராஜேந்திரன் வீடு, மன்னார் குடியில், கஜய் செல்வம் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம், மிடாஸ் மதுபான ஆலை என அனைத்து நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கொடநாடு பங்களாவும் தப்பவில்லை.தமிழகம் முழுவதும், சசிகலா, தினகரனுக்கு சொந்தமான, நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் என வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணபிரியா வீட்டில்

இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது பரோலில் வந்தார். சென்னை தி.நகர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.. கணவர் நடராஜன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவரைப் பார்க்க 5 நாட்கள் பரோல் பெற்ற சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனைக்கு சென்று வந்தார். இந்நிலையில் பரோலில் வந்து சசிகலா தங்கியிருந்த கிருஷ்ணப்ரியா வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

போயஸ் கார்டன்

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் சசிகலா உறவினர்கள் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய, வருமான வரித்துறையினர் , ஜெயலலிதாவின் வேதா நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை.  போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகத்தில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த சோதனை நடைபெற்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சில காலம் இந்த வீடு சசிகலா தரப்பிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

187 இடங்களில்

வருமான வரித்துறையினர் சோதனை ரகசியம்  கசியாமல் இருக்க, சில  நூதன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் அதிகாரிகள்,  வாடகைக் கார்களை பிடித்துள்ளனர். அதில், அவர்கள், சாமர்த்தியமாக திருமணத்துக்கு தேவை என்று பதிவு செய்து, கார்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும், டெல்லி, ஐதராபாத், புதுவை, பெங்களூரு உட்பட 10 நிறுவனங்களைச் சார்ந்த,  187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், சென்னையில், வருமான வரித்துறையினர் சோதனையை ரகசியமாக செய்வதற்கு திட்டமிட்டனர். சோதனை பற்றிய விவரங்கள் யாருக்கும் கசிந்துவிடக்கூடாது என்பது குறித்து கவனமாக இருந்தததால், ஒவ்வொரு அடியையும் ரகசியமாக எடுத்து வைத்தனர்.

கார்களில் திருமண அட்டை

வழக்கமாக ஒரு குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில்தான் கார்களை வாடகைக்கு எடுப்பது, வருமான வரித்துறையினரின் வழக்கம், ஆனால், இந்த முறை, வேறொரு கார்  நிறுவனத்தில்,  200 கார்களை சோதனைக்காகப் வாடகைக்கு எடுத்துள்ளனர்.  மொத்தமாக 200 கார்களை வாடகைக்கு எடுக்கும்போது தகவல் வெளியில் கசிந்து விடும் என்பதில், கவனமாக இருந்த வருமான வரித்துறையினர், செல்வந்தர் வீட்டுத் திருமணத்திற்கு கார்கள் வேண்டும் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரே வாடகைக்கு முன்பதிவு செய்து ரகசிய தகவலும் வெளியாகி உள்ளது. நேற்று காலை,  கார்களை வாடகைக்கு எடுக்கும் போது, அனைத்து கார் ஓட்டுநர்களிடமும் கார் கண்ணாடியில் திருமண அழைப்பிதழை ஒட்டும்படி  ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் ஸ்ரீனி வெட்ஸ்மஹி என்ற வாசகங்கள் இருந்துள்ளன.

அதிர்ச்சியில்…

வாடகை கார்களில் சென்று, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது, கார் டிரைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இது குறித்து, வருமான வரித்துறையினரை காரில் அழைத்து வந்த ஒரு டிரைவர் கூறும்போது, திருமணவிழாவுக்கு கார்தேவை என்று தான் சொன்னார்கள். கல்யாணவீட்டு சவாரி என்று வந்தோம். காரில் வந்தவர்களும், விலாசத்தை மட்டும் சொன்னார்கள், இங்கு வந்தபிறகுதான், மீடியாக்கள் வந்து பரபரப்பாக செய்திகள் எடுத்தன. அதன்  பிறகுதான் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏற்றிவந்துள்ளோம் என்பதே தெரிந்தது என்றனர்.

சோதனை ஏன்?

சசிகலா, மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து,  வருமான வரித்துறை அளித்துள்ள விளக்கத்தில், சசிகலா பெயரில், 4 போலி நிறுவனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சசிகலா நடத்தி வந்த போலி நிறுவனங்கள். இந்த போலி நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா தொலைக்காட்சிக்கும்  தொடர்புடையதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகூர்த்தம் வைத்த ஐடி

சிவாஜி படத்தில், ரஜினி, சுமனுக்கு போன் செய்து, உங்கள் வீட்டில், முகூர்த்தம் வைத்துள்ளோம் என்பார், ஆனால், சுமன் புரியாமல், முகூர்த்தம் என்றால் என்ன? என கேட்பார், அதற்கு ரஜினி, முகூர்த்தம்னா இன்கம் டாக்ஸ் ரெய்டு என்பார். அது போல், காலையில், திருமணத்திற்கு செல்வதாக, வருமான வரித்துறையினர், தனியார் நிறுவனத்தில், கார்களை வாடகைக்கு எடுத்து, சோதனை என்ற பெயரில், சசிகலா, தினகரன் வீடுகள், அலுவலகங்களில் முகூர்த்தம் வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here