Home தலையங்கம் வழக்கறிஞர் தொழிலில் புனிதம் எங்கே…?

வழக்கறிஞர் தொழிலில் புனிதம் எங்கே…?

31
0
SHARE

வழக்கறிஞர் தொழில் என்பது கவுரவமிக்க தொழில், நுண்ணறிவு, வாதத்திறமை சார்ந்த தொழில். அந்த தொழிலில் கட்டுப்பாடுடன் கூடிய ஒழுக்க விதிகள் சிறப்பாக அமைய தேவையான மாறுதல்களை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.

தமிழகத்தின் வரலாற்றில், சட்டம், ஒழுங்கு, காவல்துறை, மற்றும் நீதி பரிபாலனம் எவ்வாறு கடந்த காலங்களில் இருந்தது என்பதை இத்தருணத்தில் திரும்பிப் பார்ப்பது அவசியம். கடந்த பல ஆண்டுகளாக வக்கீல்களுக்கும் காவலர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த பனிப்போரே, பிப்ரவரி 19, 2009 அன்று எரிமலையாக வெடித்து வெளி வந்தது.

சாதாரணப்போக்குவரத்துவிதிமீறல்முதல்கிட்டத்தட்டகொலைக்குற்றம்வரை, வக்கீல்கள் காவலர்களை மிகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். வருந்தத்தக்க உண்மை என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட அடாவடித்தமான வக்கீல்கள், சட்டம் பயிலும் மாணவர்களிடத்துப் பெரும் தாக்கத்தை உண்டாக்குவது தான்.

மாணவர்கள் இவர்களின் நடவடிக்கைகளால் சுலபமாக ஈர்க்கப்பட்டுத் தமது எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொள்கின்றனர். சொல்லப் போனால் இன்னும் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டியிருக்கிறது. நீதிபதிகளுக்கு நம் உதவி எப்போதும் தேவைப்படுகிறது என்கிற எண்ணமே இவ்வக்கீல்களைத் தவறான, அடாவடித்தனங்களான காரியங்களில் தைரியமாக ஈடுபட வைக்கிறது.

நாம் எந்த தவறையும் செய்துவிட்டு எளிதில் தப்பிவிடலாம் என்றும் எண்ண வைக்கிறது. உதாரணமாக ஒரு ஆண் நீதிபதியையும் நீதிமன்ற அலுவலரையும் அடித்த வக்கீல்களும், ஒரு பெண் நீதிபதியைத் தகாத வார்த்தைகளால் பழித்த வக்கீல்களும் இன்னும் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர்.! மேலும் சக வக்கீலை நீதிமன்ற வளாகத்திலேயே அடித்துக் கொன்ற சம்பவமும் நிறைவேறியுள்ளது.! காவலர்களையும், காவல்துறை ஆய்வாளர்களையும், உயர்நீதி மன்றத்திலேயே அடித்த வரலாறுகளும் உண்டு.

இதுஒருபுறம் இருக்கட்டும், நீதியரசர் என். கிருபாகரனின் வேதனை, மனக்குமுறலுக்கு வருவோம். ”கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் வகுப்பறைக்கே செல்லாமல் பலர் வழக்கறிஞராக வருகின்றனர். காசு கொடுத்து பட்டத்தை வாங்கி விடுகின்றனர். கட்டப்பஞ்சாயத்துகளும் கொடிகட்டி நடக்கிறது. கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் வக்கீல்களை தடுத்து நிறுத்த வேண்டும். நம்மால் காப்பாற்ற முடியாவிட்டால், அந்த ஆண்டவனால்தான் இந்த புனிதமான வக்கீல் தொழிலை காப்பாற்ற முடியும். 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும்.”

இது வெறும் வார்த்தை அல்ல. வேதனையின் வெளிப்பாடு. ஒருநாடு வலிமை அடைந்த அரசாங்கமும், நீதிமன்றமும் இன்றியமையாதது. வழக்குரைத்தலின் புனிதத்திற்கும் அத்தொழிலில் களங்கமின்றி ஈடுபட்டு வரும் பல வழக்குரைஞர்களின் பெருமைக்கும் பெரும் களங்கம் விளைவித்துள்ள அந்தப் பிரிவினரை இனம்கண்டு களையெடுக்க வேண்டும். அவர்கள் செய்த குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி, அவர்களை பார் கவுன்சிலிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். அடிப்படையாகச் செய்ய வேண்டிய செயல்களாக, சட்டக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளைத் திறம்பட நிர்வாகம் செய்ய வேண்டும். சட்ட மாணவர்களுக்கு இடையே ஜாதி மற்றும் அரசியல் கட்சி சார்புள்ள சங்கங்களோ இயக்கங்களோ நடத்த அனுமதிக்கக் கூடாது. சட்டப் படிப்பு முடித்த மாணவர்களை படிப்பு முடித்த கையோடு வழக்கறிஞர் சங்கங்களில் சேர்க்கக் கூடாது. சொல்லப்போனால், பார் கவுன்சில் தவிர மற்ற சங்கங்களை தடை செய்ய வேண்டும்.

இப்போது சற்று இருள் சூழ்ந்துள்ளது. நீதி தேவதை சிறிது நேரம் கண் திறந்து பார்க்கட்டும். ஒளி வெள்ளம் பரவட்டும். நாடு தலை நிமிரட்டும்.!