Home அரசியல் வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

7
0
SHARE

சென்னை, நவ. 9& வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும் என்று ராமதாஸ்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் குடும்பங்களுக்கு  ஆண்டுக்கு அதிகபட்சமாக 100 நாட்கள் வேலை வழங்கப்படும். தமிழ்நாட்டில் இவ்வாறு வழங்கப்பட்ட வேலைக்கான ஊதியத்தை செப்டம்பர் 11ஆம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு வழங்கவில்லை. இதே போல் மற்ற மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட தேதிக்கு மேல் ஊதியம் வழங்கப்படவில்லை. அக்டோபர் மாதம் 20ஆம் தேதி முதல் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் ஊதியம் வழங்கப்படவில்லை.

அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த 20ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3066 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறதுஇதில் தமிழகத்திற்கு வர வேண்டியது ரூ.200 கோடிக்கும் அதிகமாகும்.தமிழ்நாட்டில் 69.21 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 86.77 லட்சம் பேர் இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.

அவர்களுக்கு கடந்த 10 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3000 முதல் ரூ.7000 வரை ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.48,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட அதிகம் தான் என்றாலும் போதுமானதல்ல என்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோதே பாட்டாளி மக்கள் கட்சி  வலியுறுத்தியது. இப்போது அக்டோபர் மாத முதல் வாரம் வரை இத்திட்டத்திற்காக ரூ.41,760 கோடி, அதாவது 87% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இப்போது நிலுவையில் உள்ள தொகையும், அக்டோபர் 20ஆம் தேதிக்குப் பிறகு செய்யப்பட்ட பணிகளுக்கான ஊதியமும் வழங்கப்பட்டால் மீதமுள்ள நிதியும் தீர்ந்து விடும். நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை வேலை வழங்காமல் இருக்கமுடியாது. அதுமட்டுமின்றி அனைத்துக் குடும்பங்களுக்கும் சராசரியாக 50% வேலை கூட இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, பயனாளிகளுக்கு போதுமான வேலைவழங்க வசதியாக இத்திட்டத்திற்கு ரூ.10,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.