Home தலையங்கம் பணமதிப்பிழப்பு சரியா? தவறா?

பணமதிப்பிழப்பு சரியா? தவறா?

10
0
SHARE

இந்தியாவில் தினமும் சுமார் ரூ.2.7 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. அதில் 20 சதவீதம் பணம் மட்டுமே வங்கிகள் வாயிலாக பரிவர்த்தனை செய்யப்பட்டது. மற்றவை ரொக்கமாக நடந்தது. இதனால் கருப்பு பணப் பதுக்கலும் அதிக அளவில் இருந்தது. எனவே வங்கிகள் வழியாக, செக், டி.டி. மற்றும் ஆன்லைன் மூலமாகவே பணப் பரிவர்த்தனை நடைபெற வேண்டும். வருவாய் வசூல் சிங்கிள் பேங்க் சிஸ்டம் மூலமாகவே நடைபெற வேண்டும் என்பதன் அடிப்பபடயில் கடந்த ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை இரவோடு இரவாக மதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அந்த நடவடிக்கை நடந்து இன்றுடன் (8ம் தேதி) ஓராண்டு நிறைவு அடைகிறது.

அந்த பரபரப்பான நாளை நம்மால் மறக்க முடியுமா…? மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வெளியே வந்த சில மணி நேரங்களில் பல கி.மீ தூரத்திற்கு ஏ.டி.எம். மையங்கள் முன்பாக மக்களை காத்திருந்து பணத்தை எடுத்தனர். இந்த தினத்தை எதிர்க் கட்சிகள் கருப்பு தினமாக கடைப்பிடிக்க  முடிவு செய்துள்ளன. அதேசமயம் கறுப்புப் பண ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப் போவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தபோது, ”ஒராண்டுக்கு முன் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதார வரலாற்றில் இதுவரை இல்லாத இமாலய நடவடிக்கை. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரி செலுத்தும் முறை நேர்மையானதாகவும், வெளிப்படை தன்மையுடனும் மாறும். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ரொக்கப் பணத்தின் புழக்கம் 3.89 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 15.28 லட்சம் கோடி ரூபாய் திரும்பி வந்துள்ள நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1.6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.7 லட்சம் கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து சிபிஐ உட்பட அரசின் பல கண்காணிப்பு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன.

கணக்கில் காட்டப்படாத 29,213 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 லட்சம் தனிநபர்கள் புதிதாக வரி வளையத்திற்குள் வந்துள்ளனர். இதன் மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுடன் வரி வருவாயும் உயர்ந்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லாமல் தனிநபர்களின் வருமான வரி அளவு 42 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 2.97 லட்சம் போலி நிறுவனங்கள் செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் 2.24 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்கு ஒருசாரர் வரவேற்பும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சாரர் எதிர்ப்பை வன்மையாக தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக கூறுகின்றனர். ஆனால் தான் செய்த இந்த நடவடிக்கை சரியானதே என்று மத்திய அரசு திடமான மன உறுதியுடன் மார்தட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் கருப்பு பணம் ஒழிந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் வங்கிகளின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு பாதகமாக அமையும் என்பதும், முறையாக வரி செலுத்துபவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கருத்துக்கள் பரிமாற்றம் அடைந்துள்ளன. அடுத்த ஆண்டு தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here