Home தமிழகம் கர்நாடகம் புதிய அணை கட்டுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது முதல்வர்...

கர்நாடகம் புதிய அணை கட்டுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது முதல்வர் திட்டவட்டம்

38
0
SHARE

சென்னை, ஆக. 20& கர்நாடகா அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திருவாரூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை, மறைந்த முதல்வர் சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருந்தார். இடையிலே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இப்பொழுது பேச்சுவார்த்தையின் மூலமாக சரிசெய்யப்பட்டு விரைவில் இரு பிரிவுகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேகதாதை பற்றி பல்வேறு கட்சித்தலைவர்கள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.  அது முற்றிலும் தவறானது. காவிரி நடுவர் மன்றத்தின் 5.2.2007ம் நாளிட்ட இறுதி ஆணையின் மீது உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது 11.7.2017 முதல் இறுதி வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கர்நாடகம் மற்றும் கேரள அரசின் சார்பான இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், 2.8.2017 முதல் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் சேகர் நபடேவால் இறுதிவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 17.8.2017 அன்று விவாதம் நடைபெற்ற போது, கர்நாடக மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நரிமன்  குறுக்கிட்டு, காவிரி நதியில் தமிழ்நாட்டின் பங்கான 120டிஎம்சி அடி நீரை விடுவித்த பின்னர் எஞ்சியுள்ள மிகை நீரை கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், தமிழ்நாட்டிற்கு நீர் விடுவிக்க ஏதுவாக மிகை நீரை சேமிக்க கர்நாடக அரசு மேற்கொள்ளும் புதிய அணை கட்டும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் வாதிட்டார்.

தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டபொழுது, மிகையான நீரினை தற்போதுள்ள அணையிலேயே சேமித்து வைத்து, அனைத்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உரிய பங்கினை பெற்றுக்கொள்ள குறிப்பிட்டதாகவும், தமிழ்நாடு தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

இத்தருணத்தில், தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதற்கு ஏற்ற தக்க இடத்தில் ஒரு அணையைக் கட்டி அதனை நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா என்ற கருத்தினை முன்வைத்து நீதியரசர் தீபக் மிஸ்ரா மத்திய தலைமை வழக்கறிஞர் இதற்கான நிலைபாட்டினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், கர்நாடகா மேகதாதில் புதிய அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் கூறியுள்ளதாக வந்த பத்திரிகை செய்தி உண்மைக்கு மாறனதாகும். புதிய அணைகள் கட்டுவது  தொடர்பாக மத்திய அரசு அதன் நிலைப்பாட்டினை, உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும்பொழுது தமிழ்நாட்டின் உரிமைகள் எவ்விதமும் பாதிக்காத வகையில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும்.

எனவே, தமிழக அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக, கர்நாடகா அரசு, புதிய அணை கட்டுவதற்கு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வாறு தெரிவித்தார். பேட்டியின் போது அமைச்சர் காமராஜ் உடனிருந்தார்.