Home தலையங்கம் அடாவடித்தன போக்கு வங்கிகளுக்கு தேவையா?

அடாவடித்தன போக்கு வங்கிகளுக்கு தேவையா?

25
0
SHARE

ந மது நாட்டில் பாவப்பட்டவர்கள் யார் என்றால் அது ஏழைகளும், விவசாயிகளும் தான். இவர்கள் வாழ்வாதாரத்துக்கும், கவுரவ வாழ்க்கைக்கும் நடத்தும் போராட்டம் சொல்லில் அடங்காது. எத்தனை எத்தனை போராட்டங்களை தான் சுமப்பார்கள். பெற்ற பிள்ளைகளை படிக்க வைக்கவும், நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கவும் தங்கள் சக்திக்கு மேல் பணம் என்ற ஒன்று அவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது.  இதனால் அவர்கள் விழும் இடம் தான் மீட்டர் வட்டி, கந்துவட்டி என்ற கொடிய அரக்கன்.

இதேபோல் விவசாயிகளோ, தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதற்காக வங்கியின் லோன் பெறுகின்றனர். இதுபோல் ஏழைகளும், விவசாயிகளும் தங்கள் வாழ்நாள் முழுவதலும் வட்டி, லோன் என்று மிகப்பெரிய பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கந்துவட்டி பெற்ற ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மிகப்பெரிய சம்பவம் தமிழகத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியது.

இந்த தீயின் கனல் மக்கள் மனதில் இருந்து அழிவதற்குள் திருவண்ணாமலையில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் 55 வயதான இவர் ஒரு விவசாயி. சாத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் விவசாய கடன் திட்டத்தில் டிராக்டர் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து 4 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்திய ஞானசேகரன், கடந்த 3 ஆண்டுகளாக தவணைத் தொகையை செலுத்த முடியாமல் வறட்சியில் சிக்கியுள்ளார். இதனால் ஞானசேகரனின் பெயரை வாராக்கடன் பட்டியலில் சேர்த்த வங்கி நிர்வாகம் கடன் தொகையை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் அளித்துள்ளது. 4 பேர் கொண்ட கும்பல் விவசாயி ஞானசேகரனின் வீட்டிற்கு சென்று கடனை செலுத்தாததால் டிராக்டரை ஜப்தி செய்வதாகக் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி அறுவடை முடிந்து 2 மாதத்தில் தவணைத் தொகையை செலுத்திவிடுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் ஏஜென்சி குண்டர்கள் அதை ஏற்க மறுத்து டிராக்டரை ஜப்தி செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது ஏஜென்சி ஆட்களுக்கும் ஞானசேகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏஜென்சி ஆட்கள் விவசாயியை கீழே பிடித்துத் தள்ளியதாகத் தெரிகிறது. இதனையடுத்து அவர் மயங்கி விழுந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் மாரடைப்பால்  உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அரசியல்வாதிகள், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளானது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தமிழகத்தில் விவசாயிகள் பயிர்களை விளைவிக்க படாத பாடுபடுகின்றனர். தற்போது மழைவேறு பயிர்களை நாசம் செய்துகொண்டிருக்கிறது.

இந்த தருணத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது வேதனையான ஒரு சம்பவமாக கருதப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக கடன்களையோ, வாகனங்கள் வழங்க லோனோ கொடுக்கும் வங்கிகள் விவசாயிகள் நிலையை கருத்தில் கொண்டு வசூலிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற குண்டர்களை வைத்து ஏவினால் அவர்கள் பாவம் என்னதான் செய்வார்கள். ஒரு விவசாயி பயிர் வளைந்தால் தான் பணம் ஈட்ட முடியும். அப்போது தான் பணம் தர முடியும். இதுபற்றி வங்கிகளுக்கு புரியாதா என்ன? ஏன் இந்த அடாவடித்தனம். இதுபோன்ற சம்பவங்களை முன்னுதாரணமாக கொண்டு மத்திய, மாநில அரசுகள், கந்து வட்டி மற்றும் லோன் விவகாரங்களில் இருந்து ஏழைகள் மற்றும் விவசாயிகளை காக்க ஏதாவது தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும்.