Home தலையங்கம் இதுவே நல்ல தருணம்

இதுவே நல்ல தருணம்

30
0
SHARE

மாதமும்மாரி மழை பெய்த காலம் மலைஏறிச் சென்றுவிட்டது. இப்போது மழைப்பருவத்தில் மழை பெய்யுமா…? பெய்யாதா…? வெள்ளம் வருமா…? வறட்சியை மட்டுமே தருமா…? என்பதை யாராலும் தீர்மானிக்க முடிவது கிடையாது. குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதலின் தாக்கம் அனைத்தும் தலைகீழாக நடந்தேறுகிறது.

கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு சென்னையில் மழையின் தாக்கம் அந்த அளவுக்கு இருந்தது கிடையாது. வரலாறு காணாத மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து சென்னையை வெள்ளக்காடாகவே மாற்றியது. தீவுபோல் காட்சியளித்த சென்னையில் அப்போது மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆனால் இதற்கு முன்பு சென்னையில் 2009ம் ஆண்டு தான் இதுபோன்ற மழை பெய்தது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் சென்னைக்கு மழை பெய்ததுஆனால் பெய்யவில்லை என்ற டயலாக்கே நினைவுக்கு வரும்.

அந்த 2009ம் ஆண்டையும் 2015ம் ஆண்டையும் நினைவு கூறும் வகையில் சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விடாமல் பெய்த மழையால் சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள ஏராளமான ஏரிகள் நிறைந்துள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியும் இதில் ஒன்று.

மழையின் தாக்கத்தால் ஏரிகள் நிறைந்ததோ இல்லையோ சாலைகளில் வெள்ளம் போல் நீர் ஆக்கிரமித்துக் கொண்டன. வீடுகளில் தஞ்சம் புகுந்தன. தெருக்களில் சாக்கடை நீரோடு மழைநீரும் கலந்துள்ளன. கடந்த 3 நாட்களான மழையின் தாக்கம் பெரிய அளவில் குறைந்திருந்தாலும் இன்னும் பல இடங்களில் நீர் வற்றியதாக தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் சாலைகளில் வெள்ள நீரை காண முடிகிறது.

ஆனால் அரசோ, ஆங்காங்கே மின்மோட்டார்கள் மூலம் நீர் அகற்றும் பணி நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி இருந்தும் ஏன் பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியே நிற்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

தற்போது அரசுக்கு நல்ல தருணம் கிடைத்துள்ளது. கடந்த 3 நாட்களாக மழை சற்று ஓய்வு எடுத்துள்ளது. இந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டு எங்கெங்கு தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறதோ அதனை கண்டறிந்து உடனடியாக அகற்றலாம். அதுமட்டுமின்றி நீர் வழிப்பாதையில் ஆகாய தாமரைகள், புதர்கள் மண்டிக்கிடந்தால் அவற்றை கண்டறிந்து உடனடியாக அகற்றலாம்.

கழவுநீருடன் மழைநீர் கலந்துள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நீர் வடிவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜரூராக செய்யலாம். அவ்வாறு துரித நடவடிக்கை மேற்கொண்டால் அடுத்த வரவிருக்கும் மழையில் இருந்து சென்னை ஓரளவுக்கு தப்பிக்கலாம்.

அடுத்து வரும் மழை ஒரு நாளும் பெய்யலாம். இரண்டு நாளும் பெய்யலாம். தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கலாம் என்பதால் மழை விட்ட இடைவெளி சரியான தருணமாக கருதலாம். இந்த தருணத்தை கண்டிப்பாக பயன்படுத்தினால் அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு திறம்பட செயல்பட்டால் நன்மைபயக்கும் என்பது சான்றோர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் கருத்தாகவே உள்ளது. அரசு என்னதான் செய்யப்போகிறது என்பதை கவணிப்போம்..