Home சுடச்சுட முக்காடு அணிந்து புதுவை முழுவதும் ஸ்கூட்டரில் நகர்வலம் வந்த கவர்னர்

முக்காடு அணிந்து புதுவை முழுவதும் ஸ்கூட்டரில் நகர்வலம் வந்த கவர்னர்

36
0
SHARE

 

புதுவை, ஆக. 20& முக்காடு அணிந்து ஸ்கூட்டரில் புதுவை முழுவதும் நகர் வலம் வந்தார் புதுவை கவர்னர்.

புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். கவர்னர் கிரண்பேடி ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்தவர் என்பதால் புதுவை காவல்துறைக்கு பல்வேறு அறிவுரைகளையும் கூறி வருகிறார்.இந்த நிலையில் புதுவையில் இரவில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை அறிய கவர்னர் கிரண்பேடி தானே நேரில் களம் இறங்கினார்.நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணி அளவில் கவர்னர் மாளிகையை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருடன் கவர்னர் கிரண்பேடி தலையில் முக்காடு அணிந்து ஸ்கூட்டரில் புதுவையில் நகர்வலம் வந்தார்.புதுவையின் பிரதான சாலைகளிலும், சிறிய சாலைகளிலும் ஸ்கூட்டரில் சென்று சுற்றி பார்த்தார். சுமார் ஒரு மணி நேரம் நகரத்தை சுற்றி பார்த்த அவர், பின்னர் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

இது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது புதுவையில் பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு உள்ளது. பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கிறது. இருப்பினும் போலீசார் கூடுதலாக ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும், உத்தரவுகளையும் வழங்கி உள்ளேன் என்றார். புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் தூய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர பகுதிகளில் மாணவர்களுடன் சைக்கிளில் வலம் வருவது வழக்கம்.அதன்படி   20 மாணவர்கள் மற்றும் கவர்னர் அலுவலக அதிகாரிகள் ஆகியோருடன் ராஜ்நிவாசில் இருந்து கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் புறப்பட்டார்.

உப்பளம் அம்பேத்கார் சாலை, முதலியார்பேட்டை, மரப்பாலம், 100 அடி ரோடு, புதிய மேம்பாலம், இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சாலை வழியாக மீண்டும் கவர்னர் மாளிகையை அடைந்தார்.

100 அடி சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் சைக்கிளில் சென்றபடி கவர்னர் கிரண்பேடி பார்வையிட்டார். அப்போது புதிய பாலத்தில் ஒரு வழிபாதை மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் மற்றொரு பாதையை எப்போது திறப்பீர்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டார்.மேலும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.