Home மற்றவை டாம்ரே புயலால் கனமழை; மேகங்கள் நகர இடமில்லை

டாம்ரே புயலால் கனமழை; மேகங்கள் நகர இடமில்லை

39
0
SHARE

சென்னை, நவ. 5&

இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும், வட கிழக்கு பருவ மழை, அக்.20ல் துவங்க வேண்டும். இந்த ஆண்டு, ஒரு வாரம் தாமதமாக, அக்டோபர் 27ந் தேதி துவங்கியது. ஆனால், துவங்கிய நாளில் எதிர்பார்த்த அளவுக்கு, மழை பெய்ய வில்லை. இதற்கு, தென் சீன கடலில் உருவான,’சாவ்லாபுயலே காரணமாக கண்டறியப்பட்டது.

சாவ்லா புயல், வட கிழக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அதனால், பசிபிக், தென் சீன கடல் பகுதியிலிருந்து, இந்திய பெருங்கடல் மற்றும் வங்க கடல் பகுதிகளுக்குள், ஈரப்பதம் கொண்ட மேகக்கூட்டங்கள் வருவது பாதிக்கப்பட்டது. வட கிழக்கில் இருந்து, தென் மாநிலங்களை நோக்கி வீசும் காற்றும் வலுவாக இல்லை.

சாவ்லாபுயல்,ஜப்பான் அருகே, அக்டோபர் 29ல், காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலு குறைந்து, கரையை கடந்தது. இதையடுத்து கடற்காற்றில் மாற்றம் ஏற்பட்டது. கிழக்கில் இருந்து, இந்திய பெருங்கடலை நோக்கி, வலுவான காற்று வீசத் துவங்கி, அக்டோபர் 29 முதல், மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று, தமிழகத்தில் மழை கொட்ட துவங்கியது.இந்நிலையில், தென் சீனக் கடலின் தெற்கு பகுதியில், இந்தியாவிற்கு கிழக்கே, பிலிப்பைன்ஸ் அருகில், புதிய புயல் உருவானது. இந்த புயலுக்கு, ‘ரமீல்என, பிலிப்பைன்ஸ் பெயர் வைத்தது. இந்த புயல், வடக்கு நோக்கி நகர்ந்து, பிலிப்பைன்சை தாக்கும் என, ஆய்வாளர்கள் கணித்தனர். ஆனால், ‘ரமீல்புயல், மேற்கு நோக்கி திரும்பியது. பிலிப்பைன்ஸ் கடல் பகுதியை, புயல் தாண்டியதால், அதற்கு, ‘டாம்ரேஎன, கம்போடியா பெயர் வைத்துள்ளது.

டாம்ரே புயல், வியட்நாம், கம்போடியா மற்றும் தாய்லாந்து வளைகுடாவை நோக்கி சுழல்கிறது. இந்த புயல், நாளை தெற்கு வியட்நாம் கரையை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின், கம்போடியா மற்றும் தாய்லாந்து வரை, ஞாயிற்றுக்கிழமை வரை நகர்ந்து, கன மழை தரும் என கூறப்படுகிறது.

டாம்ரேபுயலால், தாய்லாந்து வளைகுடா மற்றும் இந்தியாவின் வங்க கடல் பகுதியில், காற்றின் சுழற்சியில் கடும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து வளைகுடா, இந்தியாவின் வட கிழக்கு பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதி என, மூன்று திசைகளில் இருந்து, தமிழகத்தை நோக்கி, ஈரப்பதம் கொண்ட மேகங்களுடன் காற்று வீசுகிறது.

இந்தியாவிற்கு கிழக்கே, டாம்ரே புயல் சுழல்வதால், அந்த திசையை நோக்கி, மேகக்கூட்டங்கள் நகர முடியாமல், தமிழகம், மன்னார் வளைகுடா, அந்தமான் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒன்றாக கூடி, வலுப் பெற்று வருகின்றன.

இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர பகுதிகள், இலங்கை, அந்தமான் தீவுகளில், கன மழை பெய்து வருவதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.