Home தலையங்கம் மழைநீர்வடிய நிரந்தர தீர்வு

மழைநீர்வடிய நிரந்தர தீர்வு

17
0
SHARE

மழைமழைமழைஎன்று வடகிழக்கு பருவ மழை ஒருகாட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27&ந்தேதி தான் இந்த வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இன்றையை தேதி நிலவரப்படி சென்னையில் பல்வேறு இடங்களில் மழையின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு பெய்த மழையை கிட்டத்தட்ட நெருங்கும் வகையில் வெளுத்து வாங்கியது. கடந்த 8 நாட்களில் சென்னையில் மட்டும் வழக்கமாக இந்த மழை சீசனில் பெய்யும் மொத்த மழையின் 74 சதவீதம் பெய்து விட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 2190 ஏரிகளில் 233 ஏரிகள் முற்றிலும் நிரம்பியுள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1,266 ஏரிகளில், 73 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன எனவும், 144 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் உயரம் 140 அடி. தண்ணீர் சேமிப்பு கொள்ளவு 3231 மில்லியன் கன அடி. இவற்றில் 126.50 அடி உயரத்திற்கு 400 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. 381 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. 11 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரி 64.50 அடி உயரமும், 881 மில்லியன் கன அடி சேமிப்பு கொள்ளவும் கொண்டது. ஏரியில் 301 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. 590 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வெளியேற்றம் எதுவும் கிடையாது.

செங்குன்றம் ஏரி 50.20 அடி உயரம் கொண்டது. இதன் கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது 36 அடி உயரத்தில் 882 மில்லியன் கன அடி நீர் உள்ளது. 1646 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 84 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 84.40 அடி. மொத்த கொள்ளவு 3645 மில்லியன் கன அடி. இப்போது 72.45 அடி உயரத்திற்கு 891 மில்லியன் கன அடி நீர் உள்ளது. 16716 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 73 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த மழை சீசனில் பெய்ய வேண்டிய மழையில் 74 சதவீதம் மழை பெய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்நிலைகள் நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் நிரம்பாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இரண்டே நாட்களில் மட்டும் கடலில் 3.75 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

சென்னையில் பெய்யும் மழை நீர் முறையாக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு செல்வது கிடையாது. இதற்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ஒரு காரணம். மழை நீர் பாய்ந்து நீர்நிலைகளை நோக்கி ஓடிய பாதைகள் தடுக்கப்பட்டுவிட்டன. இதனால் மழை நீர் என்ன செய்யும் சாலைகளையும், குடியிருப்புகளையும் தான் ஆக்கிரமிக்கும்.

இதேபோல் ஒவ்வொறு ஆண்டும் மழை வெள்ளம் ஏற்படும் போது இதற்கான ஒரு தொகை ஒதுக்கப்படுகிறது. இதனை சென்னை மாநகராட்சி முறையாக பயன்படுத்துகிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். இன்னும் மழைநீர் வடிகால்வாய் பணி முழுமை பெறவில்லை. இப்படியே ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குறைகளை வைத்துக் கொண்டிருந்தால் சென்னையில் மழைநீர் எப்படி தேங்காமல் இருக்கும்?

எனவே மழைக்காலம் வரும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறுவதை அரசும், மாநகராட்சியும் விட்டுவிட்டு மழைநீர் வடிவதற்கு நிரந்தர தீர்வை காண வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு மழைக்காலங்களிலும் மக்கள் அவதிக்கு ஆளாக நேரிடும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here