Home தலையங்கம் மழைநீர் வீணாவதை எப்படி தடுப்பார்கள்…?

மழைநீர் வீணாவதை எப்படி தடுப்பார்கள்…?

31
0
SHARE

பருவ மழை பொய்த்தால் வறட்சியும்  பருவ மழை ஜெயித்தால் நாசக்காடும் என்பது காலங்காலமாக கண்கூடாக தெரியும் அவலம். வடகிழக்கு பருவ மழை என்றாலே 2015ம் ஆண்டு நிகழ்வு நம் கண் முன் வந்து நின்று பயமுறுத்திச் சென்று கொண்டுதான் இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் நீரில் மூழ்கி தத்தளித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் கடந்த ஆண்டோ பருவ மழை பொய்த்து போனது. விவசாயம் செய்யும் நிலப்பரப்பும் குறைந்தது. வாடிய பயிர்களை கண்ட விவசாயிகள் ஒன்றன்பின் ஒன்றாக செத்து மடிந்தனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத விவசாயிகள் டெல்லி வரை சென்று போராடினார்கள். அப்படியிருந்தும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 26&ம் தேதி தொடங்கியது. ஆனால் அன்றைய தினம் எதிர்பார்த்தபடி மழையை பார்க்க முடியவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மழை தனது கோர தாண்டவத்தை அரங்கேற்றியது. சும்மாவே அதிரும்என்பது போல் சென்னையில் சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கும். ஆனால் இப்படி மழையடித்தால்என்னவாகும்அந்த கோரப்பிடி சம்பவங்களை தான் தினமும் நேரிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மழை நீரை அரசு பயன்படுத்தியதா…? பொதுப்பணித்துறை என்னதான் செய்துகொண்டிருக்கிறது…? மழைநீரை சேகரிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுத்ததாக தெரியவில்லை. தற்போது வட கிழக்கு பருவமழையால் கிடைத்த மழைநீர் கூவம், அடையாறு ஆறுகள் மூலம் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 3.75 டி.எம்.சி. அளவிற்கு கடலில் கலந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூவத்தில், வினாடிக்கு, 6,500 கன அடியும், அடையாறு ஆற்றில், 14 ஆயிரம் கன அடியும், பக்கிங்ஹாம் கால்வாயில், 1,400 கன அடி நீரும், கடலுக்கு சென்றது.

ஆனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் மொத்தம், 20 சதவீதம் அளவிற்கு கூட நீர் நிரம்ப வில்லை. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டி.எம்.சி. இன்னும் பெருமழை பெய்தால் தான் குடிநீர் ஏரிகளும், இதர நீர்நிலைகளும் முழுமையாக  நிரம்பும்.

ஆனால் கிடைக்கும் மழைநீரை சேமிக்க தமிழக அரசு முறையான கட்டமைப்பு வசதிகளை செய்யாததால் இரண்டு நாள் மழைக்கே 3.75 டி.எம்.சி. மழைநீர் வீணாகி உள்ளது வெட்கக்கேடானது.  இனி வரும் காலங்களிலும் முறையான திட்டமிடல் இல்லாமல் இதேபோன்ற நிலையை கடைப்பிடித்தால் மக்கள் வசைபாட்டில் இருந்து எப்போதும்எந்த அரசும் தப்பிக்கவே முடியாது.

மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் அரசு நிரந்தர கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி பக்காவாக செயல்படுத்த வேண்டும். அப்போது தான் நீர்தேக்கங்களில் சேமிப்பை அதிகப்படுத்த முடியும். சென்னைக்கு ஓராண்டு என்ன…? இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தண்ணீர் பஞ்சமே இருக்காது. முறையான வடிகால் வசதி இல்லாததால் தான் சாலைகளில மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனையும் முறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு திறமையான யுத்திகளை கையாண்டால் மழை நீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்படும். அரசு என்னதான் செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்