Home சிறப்புச் செய்திகள் மின் வாரியத்தில் ஆட்கள் பற்றாக் குறையால் அதிகரித்து வரும் விபத்துகள்

மின் வாரியத்தில் ஆட்கள் பற்றாக் குறையால் அதிகரித்து வரும் விபத்துகள்

20
0
SHARE

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை நீரால் மிதக்கிறது. ஆனால் அமைச்சர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தங்கள் இஷ்டத்துக்கு பேட்டிக் கொடுத்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது என்ற ரீதியில்  துண்டு பிரசுரம் அச்சிட்டிருப்பதை இளைஞர்கள் தாத்தாவிடம் காட்டினார்கள்.. அவர்களிடம் தாத்தா, இளைஞர்களே அவசரப்படாதீங்க,  இது ஜனநாயகத்தை மதிக்கிற அரசு இல்லை. உங்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வார்கள் என்று அறிவுரை சொல்லி, இளைஞர்களை அமைதிப்படுத்தினார்.

தமிழ்தாத்தாவுக்கு அரசு மீது கோபம் இருந்தாலும், அதை அமைதியாக செயல்படுத்துவார் என்று இளைஞர்கள் பேசிக் கொண்டார்கள்.. சென்னை, கொடுங்கையூரில், மின் வாரியத்தின் அலட்சியத்தால், மழைநீரில் மின் கசிவு ஏற்பட்டு, இரண்டு சிறுமியர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மின் சாதனங்கள் பராமரிப்பில், அலட்சியமாக செயல்பட்ட, மூன்று பொறியாளர்கள் உட்பட, எட்டு பேர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளனர்.

மழைநீரில் மூழ்கிய, மின் வினியோக பெட்டியில் இருந்து, மின் கசிவு ஏற்பட்டதால், இந்த விபரீதம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை நினைத்து, நமக்கு கோபம்தான் வருகிறது.. அதே நேரத்தில் கொடுங்கையூரில் 7 லைன் மேன், ஏழு உதவியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பது ஒரு லைன் மேன், ஒரு உதவியாளர்தான்.

வேறு வழியில்லாமல் உதவி பொறியாளர் இரண்டு தற்காலிக பணியாளர்களை நியமித்துக் கொண்டு பணிகளை செய்து வருகிறார் என்ற உண்மை செய்தியையும் பதிவு செய்யாமல் இருக்க முடியாது.. மின்சாரவாரியத்தின் அதிகாரிகள் மின்சார விநியோகம் தொடர்பான பராமரிப்பு பணிகளை செய்வதே இல்லை. ஆனால் ஆண்டுக்கு பல கோடி பராமரிப்பு பணி செய்ததாக பில் மட்டும் போட்டு எடுத்து வருகிறார்கள் என்ற தாத்தா அடுத்த செய்திக்கு தாவினார்.

பிரதமர் இந்த மாதம் 6&ம் தேதி சென்னைக்கு வருகிறார். பல நிகழ்ச்சிகள் இருந்தாலும், பிரதமர் அலுவலகத்தில்  கூடுதல் செயலாளராக பணியாற்றி, தமிழக அரசு பணிக்கு வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சோமநாதன் வீட்டு திருமணத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் சோமநாதன் ஆகஸ்டு மாதமே பிரதமர் அலுவலக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக அரசு பணிக்கு வந்துவிட்டார்.

ஆனால் இரண்டு மாதமாக அவருக்கு பணி கொடுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்து உள்ளார்கள்..ஏனென்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டதில் முக்கிய பங்கு வகித்தவர் இவர் என்று தாத்தா சொன்னவுடன், இளைஞர்கள் தாத்தா.. .ஐ.ஏ.எஸ் அதிகாரிதானே 1996&ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 1991& 96 அ.தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் சோமநாதனும் முக்கிய பங்கு வகித்தவர்..இதுக்கு மேலே வேண்டாம்.. பெரிய இடத்து விவகாரம் என்ற தாத்தா, பாட்டியை தண்ணீர் கொண்டு வர சொல்லி குடித்தார். பின்னர், அமலாக்க பிரிவு விசாரணையில் இருக்கும் சேகர் ரெட்டிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. என்றதும் இளைஞர்கள் அப்படியா தாத்தா என்று ஆவலோடு கேட்டனர்.

ஆமாம். ஓய்வு பெறும் நாளில், கதர் கிராமத் தொழில் வாரியத்தின் துணை இயக்குனர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார் என்று தாத்தா கூறும்போதே, தாத்தா இதுக்கும்.. சேகர் ரெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டனர், இளைஞர்கள். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின், இணை இயக்குனராக பணியாற்றியவர், ரவி. இவரது பணிக்காலம், அக்., 31ல் முடிந்தது. ஓய்வு பெறும் நாளான  காலை வழக்கம் போல பணிக்கு வந்தார். மாலை பணி முடிந்து, வீட்டிற்கு புறப்பட்டபோது, சற்று நேரம் காத்திருக்கும்படி, ரவியிடம் அதிகாரிகள் கூறினர்.

இரவு, 9:00 மணிக்கு, அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கான கடிதத்தை வழங்கினர். அதிர்ச்சியுடன், அவர் வீடு திரும்பினார். அவர், 1982 நவம்பர் வரை, ‘டிப்ளமா’ படித்ததாக, சான்றிதழில் உள்ளது. அதேநேரம், 1982 ஆக., முதல், 1984 செப்., வரை, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்ததற்கான சான்றிதழையும் வழங்கி உள்ளார்.

இதில், முறைகேடு நடந்துஉள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வேலூர் மாவட்டம், தரப்படமேடு கிராமத்தில் இருந்த, வாரியத்திற்கு சொந்தமான, 87 ஆயிரத்து, 120 சதுர அடி நிலத்தை  சேகர் ரெட்டிக்கு அடிமாட்டு விலைக்கு விற்றதிலும் முறைகேடு நடந்துள்ளது என, அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மூத்த பத்திரிகையாளர் ஒருவரும் சி.பி.ஐ.யில் புகாரும் கொடுத்தார். அதன் அடிப்படையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர் என்று தொய்வு இல்லாமல் பேசி முடித்தார் தாத்தா. இளைஞர்கள் ஆச்சரியத்துடன் தாத்தாவின் முகத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.