Home தமிழகம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு புதிய செயலியுடன் கைபேசிகள் முதல்வர் தொடங்கி வைத்தார்

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு புதிய செயலியுடன் கைபேசிகள் முதல்வர் தொடங்கி வைத்தார்

14
0
SHARE

சென்னை, நவ. 3& 108 ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களுக்கு புதிய செயலியுடன் கூடிய கைபேசிகள் வழங்கும் திட்டத்தினை முதல்வர் தொடங்கிவைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 புதிய ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கும் அடையாளமாக 12 வாகனங்களின் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், 80 லட்சம் ரூபாய் செலவில் அவசரகால ஊர்தி ஓட்டுநர்களுக்கான செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு கைபேசிகள் வழங்கும் திட்டம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் செயலி ஆகியவற்றை துவக்கி வைத்தார்.

சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் விலை மதிப்பற்ற மனித உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.  மறைந்த முதல்வர் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விபத்துக்களை குறைக்கவும், உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்தல், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தலைக்காய பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவசரகால முதலுதவிக்காக 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 புதிய 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கும் அடையாளமாக, 12 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

108 அவசரகால மைய கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொண்டு விபத்து பற்றி தகவல் தெரிவிக்க ஏதுவாக 5 இலட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் செயலியை  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் துவக்கி வைத்தார். இச்செயலி மூலம் அழைப்பவரின் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டு, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்ப உதவும். பொதுமக்கள் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர்  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

108 அவசரகால ஊர்திகள், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சென்றடைந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் 75 லட்சம் ரூபாய் செலவில் 108 அவசரகால ஊர்தி ஓட்டுநர்களுக்கான செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு கைபேசிகளை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 3 ஓட்டுநர்களுக்கு கைபேசிகளை வழங்கி முதல்வர் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்த புதிய செயலி மூலம், 108 மையக் கட்டுப்பாட்டு அறையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பெறப்படும் தகவல்கள், அழைப்பவரின் அருகாமையில் உள்ள 108 அவசரகால ஊர்திக்கு பரிமாறப்பட்டு, ஊர்தி ஓட்டுநர் குறுகியகாலத்தில் பாதிக்கப்பட்டவரை சென்றடைய உதவும்.  இரவு நேரங்களில் வழி கூற யாரும் இல்லாத காலங்களில், இந்த செயலி மூலம் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை ஓட்டுநர் அறிந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை சென்றடைய முடியும்.

இந்த நிகழ்ச்சியில்,  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும்  அமைச்சர்கள் , தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர்  ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழும, குழும இயக்குநர்  டேரஸ் அஹமது, தமிழ்நாடு சுகாதார திட்ட, திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here