Home Uncategorized அதிகரிக்கும் தற்கொலைகள்

அதிகரிக்கும் தற்கொலைகள்

56
0
SHARE

இப்போது இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, பெற்றோர் திட்டினால் தற்கொலை, காதல் நிறைவேறாவிட்டால் தற்கொலை என்று இப்படி பல விதங்களில் இளைஞர்களும், இளைஞிகளும் ஒரு நிமிடத்தில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால் நடுத்தர வயதில் உள்ளவர்களும், முதியவர்களும்கூட தற்போது தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி உள்ளது.

இதற்கெல்லாம் முதல் காரணம் தனிமையும், கவனிப்பாரின்மையும்தான் காரணம். பல வீடுகளில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இவர்கள் இருவருமே அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்பினால் இரவில்தான் வீடு வந்து சேருவார்கள். அதுவரை வீட்டில் உள்ள குழந்தைகள் வேலை செய்பவர்களின் பராமரிப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வீட்டு வேலைக்கு வரும் ஆயாக்கள் எல்லோருமே நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. குழந்தைகளை பக்குவமாக கையாலாவிட்டால் அவ்வளவுதான். அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு போரடிக்காமல் இருக்க செல்போனை கொடுத்து விட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால் குழந்தைகள் செல்போனுடனே நாள் முழுவதையும் கழிக்கின்றனர். இப்போது நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல் விளையாட்டை சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விளையாடி வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக விளையாடப்படும் இந்த விளையாட்டில் 50&வது நாளின் இறுதியில் போட்டியாளர் தற்கொலை செய்து கொள்ளும் இறுதி சவால் விடப்படுகிறது.

இதனை ஏற்று உலகெங்கும் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் கடந்த 2 வாரங்களில் 12 வயது முதல் 19 வயதுவரையுள்ள 6&க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்து உள்ளனர். இதுதொடர்பான வழக்கில் டெல்லி சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டுள்ளது. இந்த விளையாட்டை உடனடியாக தங்களின் இணையதளத்தில் இருந்து நீக்கும்படி கூகுள், யாகூ, பேஸ்புக், வாட்ஸ் அப், மைக்ரோசாப்ட் ஆகிய இணையதள நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொழில் நுட்பம், மற்றும் எலக்ட்ரானிக் துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது. அன்று கூட்டுக்குடும்பமாக இருந்தபோது தாத்தா, பாட்டி, மாமா, மாமி என்று அருகில் இருந்து குழந்தைகளை பார்த்துக்கொண்டனர். இன்றோ திருமணம் ஆனதும் பெற்றோரை ஒதுக்கிவிட்டு தான் தன் குடும்பம் என்று இருப்பதால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஆகவே மன அழுத்தம் காரணமாக சிறுவர்&சிறுமிகளின் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன. ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணித்து, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களை புரிந்து கொண்டு செயல்பட்டால் பெருமளவு தற்கொலைகளை தவிர்க்கலாம்.