Home தலையங்கம் முற்றிலும் தடை செய்யப்படுமா…?

முற்றிலும் தடை செய்யப்படுமா…?

19
0
SHARE

 ஒருவர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு நிறுவனம் தங்களது  பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்திற்காக கையாளப்படும் விளம்பர யுத்திக்காகவும் பிளக்ஸ் போர்டு, பேனர்கள், சைன் போர்டுகள் என்று சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி பொதுமக்களுக்கும் இது பெரிய இடைஞ்சலை கொடுத்து வருகிறது.

அது மட்டுமா…? உயிர்களை காவும் வாங்கிவிடுகிறது. கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதும், இதனால் தேவையின்றி பாலை கீழே கொட்டுவதுமான சூழ்நிலையும் உருவானது. நாளுக்கு நாள் இதுபோன்ற பேனர்களால் பல்வேறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கவே நீதிமன்ற உதவியை நாட வேண்டிய சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டது.

இதனால் தலையில் ஒரு குட்டு வைக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பில், உயிரோடு இருப்பவருக்கு கட் அவுட், பேனர்கள் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என்று உத்தரவிட்டது. இதனால் அரசியல்வாதிகள் முதல் பேனர் வைத்து  பிரபலமடையும் எண்ணம் கொண்டவர்கள் வரை திக்குமுக்காடினர். நீதிமன்றத்தின் இந்த அதிரடியை வேறுவிதமாக திசை திருப்பிய சில புள்ளுருவிகள்…,, இறந்தவர்களுக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யும் அடாவடித்தன போக்கை தூண்டிவிட்டனர்.

இந்த பேனர், கட்அவுட் இவைகளையும் தாண்டி சென்னை சிட்டியில் சிக்னல்களில் வைக்கப்படும் சைன் விளம்பர போர்டுகள் வாகன ஓட்டிகளை திசை திருப்புவதாலும் விபத்துக்கள் ஏற்படுவதாக வந்த புகார் மனுவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிக்னல்களில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளுக்கும் தற்போது தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் இந்த இரண்டு உத்தரவுகளும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பேருதவியாக அமைந்துள்ளது. இவற்றை செய்த நீதிமன்றம், ஒரேயடியாக பேனர்கள், கட்அவுட், பிளக்ஸ் போர்டு, சைன் போர்டுகளுக்கு தடை விதித்தால் (திருமண நிகழ்ச்சிகளை தவிர) பொதுமக்கள் மிகவும் நிம்மதியடைவார்கள்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காற்றில் பறக்க விடுபவர்கள் காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளுமே ஆவார்கள். எனவே இதுபற்றி ஒரு முக்கிய முடிவை தெள்ளத்தெளிவாக எடுத்தால் பேனர், போஸ்டர் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்கலாம்.

பெரு நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் புதுமையான ஒரு யுத்தியை கையாண்டு சாலைகளில் மீண்டும் சைன் போர்டு போன்று வேறு ஏதேனும் வைக்க வாய்ப்பு இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் விழிப்புணர்வு போர்டுகளை தவிர மற்ற விளம்பர போர்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது. அவ்வாறு அளிக்கப்பட்டால் இது வாகன ஓட்டிகளுக்கு செய்யும் பெரிய துரோகமாகும்.அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் உயிரை குடிக்கும் செயலாகும்.

நீதிமன்றம் மட்டும் இன்றி அரசும் இதில் திடகாத்திரமானதீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டும். இப்போது தான் ஊடகங்கள் இருக்கின்றனவேஅதன் மூலம் விளம்பரப்படுத்திக் கொள்ளட்டும். செய்தித்தாள்களில் தங்கள் விளம்பரங்களை கொடுத்துக்கொள்ளட்டுமேஎதற்கான பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், சைன் போர்டுகளை வைக்க வேண்டும்.

உள்ளூர் நிகழ்வுகள் என்றாலும்வீடு வீடாக கொண்டுவந்து தங்கள் விளம்பரங்களை தெரிவிக்க பிட் நோட்டீஸ் இருக்கிறது. அந்த வழியைக்கூட அவர்கள் கையாளட்டுமே.. சாலைகளை ஆக்கிரமித்துதான் விளம்பரத்தை தேட வேண்டுமா என்ன…? விளம்பரதாரர்களும், அரசியல்வாதிகளும் முதலில் இதுபற்றி யோசிக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்ற போர்வையில் அவர்களுக்கு தொல்லைகளை கொடுப்பது நியாயமா? தாங்களே இதை உணர்ந்து திருந்தினால் ஒழிய இந்த செயலை யாராலும் திருத்த முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here