Home தலையங்கம் சென்னை முழுவதும் வடிகால் வசதி தேவை!

சென்னை முழுவதும் வடிகால் வசதி தேவை!

35
0
SHARE

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு’’

என்கிற திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்றாற்போல் “நீர் இல்லாவிட்டால் எந்த உயிரும் வாழ முடியாது. உலக வாழ்வே முடிந்து விடும். அதே போலத்தான் இப்போது தமிழகத்தில் பருவ மழை பொய்த்து விட்டது. எங்கு பார்த்தாலும் வறட்சி. சோலை வனம் பாளைவனமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

தென் மேற்கு பருவ காலத்தில் தமிழகத்திற்கு ஓரளவிற்கு மழை கிடைத்தது. இதனால் முன்பிருந்த காலத்தில் பயிரிடப்பட்ட ஏக்கர் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பயிர் விளைச்சலும் சூடுபிடித்துள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம் தான்.

தற்போது தென்மேற்கு பருவ காலம் முடிவடைந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது. பருவம் தொடங்கியதுமே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை தனது வேகத்தை காட்டத் தொடங்கிவிட்டது. சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் 300 இடங்கள் தாழ்வானப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேங்கும் மழை நீர் 450 மின் மோட்டார்கள் மூலம் அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையை பொருத்தவரை மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லாததால் அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. சிறிய மழைக்கே பெரிய அளவில் நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிகால் வசதிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இது இன்னும் நிறைவடைந்ததாக தெரியவில்லை. இப்போதும் ஆங்காங்கே தோண்டிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது மிக முக்கியமான ஒன்று. பருவ மழை தொடங்கியபோது ஆங்காங்கே தோண்டிக் கொண்டிருந்தால் மக்களுக்கு அரசின் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்? கன மழை பெய்து பழைய நிலை ஏற்பட்டால் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது அரசு புரிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.  சென்னை முழுவதும் சரியான மழை நீர் வடிகால் மிக மிக அவசியம் தேவைப்படுகிறது.

மழை நீரை சேமிக்க ஏதாவது புதிய நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஆண்டு மழை பொய்த்துப்போனால் சென்னைக்கு குடிநீர் கிடைப்பதற்கு மிகப்பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். எனவே தற்போது பெய்யும் மழை மூலம் கிடைக்கும் நீரை சேகரிக்க ஏதாவது ஒரு உத்தியை அரசு கையாள வேண்டும். இதற்கு அதிகாரிகளை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலோசனையின் முடிவு நீர் வற்றாமல் இருக்க தெர்மகோல் போடப்பட்ட கதையாகிவிடக்கூடாது.

மழை விட்டுவிட்டு பெய்து வந்ததால் நேற்று சாலை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. இதுபோன்ற இக்கட்டான நிலையில் போக்குவரத்து காவலர்கள் துரிதமாக பணியாற்றினால் தான் எந்த ஸ்தம்பிப்பும் இல்லாமல் இருக்கும். இதுபோன்று இந்த மழைக்காலங்களில் பலவிதமான சிக்கல்கள் நேர வாய்ப்பு உள்ளது.

தீபாவளி, பொங்கல் நேரங்களில் போக்குவரத்து போலீசார் எந்த அளவுக்கு அருமையாக பணியாற்றினார்களோ அதேபோல் பருவ மழை காலங்களிலும் பணியாற்ற வேண்டும். புயல், மழை எச்சரிக்கைக்கு ஏற்றாற்போல் அனைத்து துறைகளும் துரித முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் மழை நீரையும் சேமிக்கலாம்… பாதிப்புகளில் இருந்தும் தப்பலாம்.