Home தலையங்கம் குழந்தை திருமணம்: ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை

குழந்தை திருமணம்: ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை

56
0
SHARE

பருவ நிலை மாற்றங்கள் அறிந்து, எந்த பருவத்தில் எதை பயிர் செய்தால் விளைச்சல் கைகூடி வரும், உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டும் என்பதை தெரிந்து பயிர் செய்ய வேண்டும். அதுபோலதான் இளமையில் கல்வி என்பதும்.

இளமை பருவம் என்பது கல்விக்குரியது. அப்பருவத்தை மாணவர்கள் வீண் செய்துவிடக் கூடாது. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுஎன்று முன்னோர்கள் உரைத்ததை மனதில் கொண்டு கல்வி பயிலவேண்டும்.

இளமை பருவத்தில் தொலைத்த கல்வியை முதுமை பருவத்தில் தேடுவது மிகவும் கடினம். இதனால் மாணவர்கள் காலத்தின் அருமையை உணர்ந்து கல்வியை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் பயில வேண்டும்.

இந்த கல்விக்கு பெரும் தடையாக வறுமை ஒருபுறம் இருந்தாலும், பலருக்கு பால்ய வயதில் ஏற்படும் திருமணமும் காரணமாகிறது. இந்த பால்ய மணம், பல நூற்றாண்டுகளாக நம்மை தொடர்ந்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும், பாரதத்தில் இதனை சிலர் தங்களின் கலாசாரமாகவே ஆக்கி விட்டனர். இந்த பால்ய விவாஹம், ஏதோ ஒரு மதம் சம்பந்தப்பட்ட அல்ல. இதற்கு பல்வேறு வாழ்வியல் நடைமுறைகள் உதாரணங்களாக நமக்கு கிடைத்துள்ளன. சமீபத்திய ஆய்வில், குழந்தை திருமணம் தெற்காசியாவில் மிக வேகமாக பரவி வருவது அப்பட்டமாகிறது.

இதுமட்டுமா, இதில் இந்தியா 2&ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தை வங்கதேசமும், 3&ம் மற்றும் 4&ம் இடங்களில் நேபாயம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பிடித்து உள்ளன. இந்த குழந்தை திருமணத்தை தடுக்கவே, பிறப்பு சான்றிதழ் அவசியம் என்று அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன்மூலம் குழந்தையின் தெளிவான வயதை நாம் கணக்கிட முடியும்.

இது ஒருபுறம் இருந்தாலும், இது எங்களின் கலாச்சாரம், குடும்ப விவகாரம், தனிப்பட்ட உரிமை என்றெல்லாம் கூறி இந்த பால்ய மணங்கள் ஓசையில்லாமல் ஆங்காங்கே அறங்கேறி கொண்டேதான் இருக்கின்றன. இதற்கு நம் நாட்டில் உள்ள முரண்பாடான சட்ட விதியும் ஓர் காரணம். ஆம். அது என்ன விதி என்றுதானே கேட்கிறீர்கள். இது பிரம்மன் எழுதிய விதி அல்ல. மனிதன் எழுதியது. இதனை மாற்றி அமைக்கும் கட்டாயத்தில் நாம் தற்போது உள்ளோம். இந்தியாவில் ஆணின் திருமண வயது 21 ஆகும். பெண்ணின் திருமண வயது 18. இந்திய தண்டனை சட்டம் 375&வது (பாலியல் பலாத்காரம் தொடர்பான) பிரிவின் விதிவிலக்கு, 15 வயதை தாண்டிய மனைவியுடன், அவரது கணவன் தாம்பத்யம் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

ஆனால் சிறுவர், சிறுமிகளை பாலியல் தாக்குதல்களில் இருந்து காக்கும் போஸ்கோ சட்டப்பிரிவு, 18 வயதுக்கு குறைவான (ஆண், பெண் இருபாலரும்) குழந்தைகளாகவே கருதப்படுகின்றனர் என்று தெளிவாக கூறுகிறது. இதன்மூலம் அவர்களுடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குறிய குற்றமாகும். மேலே குறிப்பிட்ட விதிவிலக்கு சட்டவிதி, சில குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள காரணமாகிறது. மேலும் குழந்தை திருமணம் நடைபெறுவதையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

மேலும் இது பெண் குழந்தைகளுக்கு இருக்கும் உடல் ரீதியான இறையாண்மையை மீறுவதாகவும் அமைந்து உள்ளது. இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை. இந்த நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பின்படி, மனைவியாக இருந்தாலும், அவரின் வயது 18 வயதிற்குட்பட்டு இருந்தால் அவருடன் தாம்பத்யம் வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். அதாவது பாலியல் பலாத்கார குற்றமாக கருதப்படும். இந்த தீர்ப்பு, முரண்பாடு சட்ட விதியை நீக்க வழிவகை செய்கிறது. இனியாவது நாடு முழுவதும் தொடர்ந்து அமலில் இருக்கும், குழந்தை திருமண முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். பெண்குழந்தைகளின்உரிமைகள் காக்கப்பட வேண்டும்.