Home சம்பவம் முதல்வர் வரவேற்பு பேனரை அகற்றிய டிராபிக் ராமசாமி திருவல்லிக்கேணியில் பரபரப்பு

முதல்வர் வரவேற்பு பேனரை அகற்றிய டிராபிக் ராமசாமி திருவல்லிக்கேணியில் பரபரப்பு

17
0
SHARE

சென்னை, அக். 13& சென்னை திருவல்லிக்கேணியில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் பேனரை டிராபிக் ராமசாமி அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எந்த அமைப்பினரும் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னையில் பல இடங்களில் தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொது மக்கள் பாதிப்படைவதாகவும் குற்றச்சாட்டுகள்  வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதேபோன்று, உதயநிதி ஸ்டாலினை வரவேற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவைகள் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று காலை வாலாஜா சாலை சென்றார். அங்கு தடையை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்களை புகைப்படம் எடுத்தார். அதை தொடர்ந்து பேனர்களை அகற்ற முயன்றார். இதைத் கேள்விப்பட்டு பேனர் உரிமையாளர்களும், மாநகராட்சி ஊழியர்களும், திருவல்லிக்கேணி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர். அதன் பிறகே டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.