Home சுடச்சுட சென்னையில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்...

சென்னையில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைக்கிறார்

9
0
SHARE

சென்னை, அக். 4&

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாமினை நாளை (5ம் தேதி)   சென்னையில் தொடங்கி வைக்கிறார், இம்முகாமில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நுண் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், அந்நிறுவனங்களுக்கு கடனுதவி செய்வதற்கும் மத்திய அரசு பாரதப் பிரதமரின் முத்ரா யோஜனா என்ற திட்டத்தை 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை நுண் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு கடனுதவியாக பல்வேறு நிலைகளில்  வழங்கப்படுகிறது.  இக்கடன் திட்ட ஊக்குவிப்பு முகாமினை சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கில் நாளை ( 5 ம் தேதி) 10.30 மணிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா  சீத்தாராமன் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு முத்ரா கடன் உதவிகளை வழங்கி பேசுகிறார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக அரசு கூடுதல் தலைமைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஹன்ஸ் ராஜ் வர்மா, வரவேற்புரையாற்றவும், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் தலைவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர். சுப்பிரமணியகுமார் நன்றியுரையாற்றவும் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், வங்கிகளின் உயர் அலுவலர்கள், முத்ரா கடன் உதவி பெறும் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்விழாவினை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையும், சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கியாளர் குழுமமும் இணைந்து நடத்துகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here