Home தமிழகம் டெங்கை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைஅமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

டெங்கை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைஅமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

42
0
SHARE

சென்னை, அக். 4& 

தமிழகத்தில் டெங்கு போன்ற காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.13.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு மருத்துவ குழுவினருடன் கூடிய நில வேம்பு குடிநீர் வழங்கும் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்து  பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் செயல்படும் 1,491 மருத்துவ நிலையங்கள் மற்றும் 28 சித்தா மற்றும் இந்திய மருத்துவ முறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நில வேம்பு குடிநீர் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தவிர தமிழகம் முழுவதும் 2000 கிலோ நிலவேம்பு பொடி டாம்ப்கால் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் கசாயமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாண்டிபஜார், மெரினா கடற்கரை, தி.நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 35 வாகனங்களில், மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களுடன் நேரில் சென்று நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த வாகனங்களின் மூலம் சென்னையில் நாள் ஒன்றுக்கு 50,000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.13.95 கோடி மதிப்பீட்டில் கொசுவை கட்டுபடுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவுறுத்தலின்படி வாரம்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டெங்கு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட குறும்படங்கள் திரையிடவும் அறிவுத்தியுள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு ரூ.23 கோடி மதிப்பிலான 837 ரத்த அணு கருவிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், அடுக்கு மாடி குடியிருப்பில் 10 மாடி உயரம் வரை புகை செல்லக்கூடிய புதிய கொசு கட்டுப்பாட்டு புகை கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், டெங்கு காய்ச்சலை பரப்பும் மூலக் காரணிகளான தேங்காய் ஓடு, டயர், பயன்படுத்திய டீ கப், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தண்ணீர் தேக்கி வைக்கும் கலன்கள், தங்கள் வீடுகளில் உள்ள பராமரிக்கப்படாத மீன் தொட்டி, குளிர்சாதன பெட்டியில் உள்ள நீரை அடிக்கடி சுத்தம் செய்து அகற்றிட வேண்டும்.ஓருநாள் காய்ச்சல் தான் என்று பொதுமக்கள் சாதாரணமாக இருந்திட வேண்டாம்.  காய்ச்சலுக்கான அறிகுறிகள் கண்டவுடனே, தாமதப்படுத்தாமலும், தள்ளியும் போடாமலும், தானாக மருந்து கடைகளில் சென்று மருந்து வாங்கி உட்கொள்வதை தவிர்த்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும்  என கூறினார்.    

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் ,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் பியாரே, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் குழந்தைசாமி, இணைஇயக்குநர்பார்த்திபன்மற்றும்உயர்அலுவலர்கள்கலந்து

கொண்டனர்.