Home சம்பவம் பேரூராட்சியிலும் 100 நாள் வேலைத்திட்டம்:  விவசாயத் தொழிலாளர்கள் பேரணி

பேரூராட்சியிலும் 100 நாள் வேலைத்திட்டம்:  விவசாயத் தொழிலாளர்கள் பேரணி

22
0
SHARE

சென்னை, அக். 4&

பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தமிழ் மாநிலக்குழு சார்பாக பேரணி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகளில், 500க்கும் மேலான பேரூராட்சி மக்கள் முழுமையாக விவசாயத்தையே நம்பி இருக்கின்றனர். இங்கு வசிக்கும் சுமார் 40 லட்சம் விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஆலைகளோ, நிறுவனங்களோ இல்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்திடவேண்டும்.

கிராமப்புற வேலை திட்டத்தில் வறட்சி காலத்தில் வழங்க வேண்டிய சட்டப்படியான 150 நாள் வேலையை வழங்கிட வேண்டும். வறட்சி நீடிக்கும் நிலையில் விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டகூலி ரூ.205 வழங்கிட வேண்டும்.

ஊரக வேலைதிட்ட நாட்கள் 200 ஆகவும், தினக்கூலி ரூ.400 ஆகவும் உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தமிழ் மாநிலக்குழுவின் சார்பாக சேப்பாக்கத்திலிருந்து தலைமைச்செயலகம் வரை பேரணி நடைபெற்றது.

இப்பேரணியைக்கு இச்சங்கத்தின் மாநில தலைவர் ஏ.லாசர் தலைமை தாங்கினார். வீ.அமிர்தலிங்கம் மாநில பொதுச்செயலாளர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி, கிராமப்புற மக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.