Home சம்பவம் திருவொற்றியூரில் வாலிபர் அடித்துக் கொலை? தூக்கில் பிணமாக மீட்பு

திருவொற்றியூரில் வாலிபர் அடித்துக் கொலை? தூக்கில் பிணமாக மீட்பு

12
0
SHARE

சென்னை, அக். 4&

சென்னை திருவொற்றியூரில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சாவு வீட்டில் நடந்த தகராறில் வாலிபரை அடித்து கொன்று தூக்கில் மாட்டி விடப்பட்டாரா? என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர், பலகை தொட்டி குப்பம் பகுதியை சேர்ந்த பிரபாகர் மகன் நரேஷ் (26). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் அதேபகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள ஆல மரத்தில் நரேஷ் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். தகவல் கிடைத்து, திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து, நரேஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, நரேஷின் பெற்றோர், அவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை அடித்துக் கொன்று விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  நடத்திய விசாரணையில், அதே பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாவு வீட்டுக்கு நரேஷ் சென்றுள்ளார். அங்கு நவீன் என்பவருக்கும், நரேசுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அதில் நரேஷ் திருப்பதிக்கு போடப்பட்டிருந்த மாலை அறுக்கப்பட்டதாம். இதனால், ஆத்திரமடைந்த நரேஷ், நவீனை அடித்துள்ளார். இதையடுத்து, நவீன் மற்றும் உறவினர் முத்து உள்ளிட்ட சிலர் ஒன்று சேர்ந்து நரேசை அடித்து விட்டு உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நரேஷ் தூக்கில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.