Home தலையங்கம் மிரட்டும் டெங்கு…!

மிரட்டும் டெங்கு…!

24
0
SHARE

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் தேங்காய் சிரட்டை, உடைந்த பிளாஸ்டிக் துண்டுகள், டயர்கள், டியூப் லைட்டுகள் பழைய கட்டிடங்கள் மற்றும் மனிதர்கள் நடமாட்டமில்லா பகுதிகளில் கொட்டிக் கிடக்கின்றன.

இதுமட்டுமா சிலர் வீட்டின் கூரைப் பகுதிகளில் இதுபோன்ற உபயோகமில்லா பொருட்களை போட்டு வைத்திருப்பதை நாம் காணமுடிகிறது. இவற்றை நகராட்சி, பேரூராட்சி, மாநாகராட்சி, ஊராட்சி மற்றும் சுகாதார ஊழியர்கள் மட்டுமே அகற்றுவது என்பது சாத்தியமில்லாதது. இதனை அகற்றுவது என்பது அத்துனை சுலபம் அல்ல. இதில் தனிக் கவனம் நிச்சயம் நாம் செலுத்தி ஆக வேண்டும். ஏன் தனிக்கவனம் செலுத்தி ஆக வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இதனை கட்டுப்படுத்துவதால் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவுவதை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம். இன்றைய சூழலில் தமிழகம் முழுவதும், டெங்கு வேகமாக பரவி வருகிறது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் அடங்கும். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தாலும், கொசு உற்பத்திக்கான காரணியை முற்றிலும் அழிப்பது நம் கடமையாகும். பள்ளிக் கூடங்களில் ஏதேனும் இடங்களில் கழிவு நீர் தேங்கி உள்ளதா? என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகம் சோதனை செய்ய வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஒளிவு மறைவற்ற நடைமுறை தேவை.

இதனை அனைத்து பள்ளிகளும் உணர வேண்டும். சில பாடச்சாலையின் மைதானங்கள் டெங்கு உற்பத்தி கூடமாக இருப்பதை காண முடிகிறது. தொடர் விடுமுறைக்கு பின்னர் மாணவ, மாணவியர் பள்ளி வருகின்றனர். அவர்களின் ஆரோக்கியத்தில் பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். எனவே மைதானம் மற்றும் ஒதுக்குப்புறங்களில் உள்ள மழைநீரை அகற்ற முன்வர வேண்டும். ஏனெனில் இந்த நீர் வெளியேறாததால், அவைகள் கொசுக்களின் உற்பத்தி காரணி ஆகின்றன. இந்த நிலைமை மாற வேண்டும்.