Home சிறப்புச் செய்திகள் பெருமாளின் மகிமை

பெருமாளின் மகிமை

12
0
SHARE

இந்தியாவில் அதிக வருமானம் உள்ள கோவில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப் பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்த பெருமானை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். புரட்டாசி பிரமோற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் கருடசேவை நடக்கும்.

அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின்போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள். பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே ஆடு மேய்க்கும் கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.

  பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்கார கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் அவர் கடன்காரர். அவரது வரலாறு படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.

  இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிறப்புகள் உள்ளன. “படிகாவலி மஹா துவாரம் என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.

கோவிலுக்குள் 3 பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை சம்பங்கி பிரதிட்சணம் என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஜனா மகால், தவஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.

  கோபுரத்தைக் கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி(இடது), சின்னாதேவி(வலது) ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதிராயர் மன்னரின் சிலை உள்ளது.

1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநககரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராமர் பட்டாபிஷேகம், கிருஷ்ணலீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

  சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14&ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 1320&1360களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜயநகர பாணியில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

  ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோவிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகனதேவி மற்றும் பீதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன.

  திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளைக் கொண்ட ஜனா மகால் உள்ளது. வரிசைக்கு 6 தூண்கள் வீதம் 6 வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியில் உள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.

  வைகானஸ ஆகம விதிகளின் படி துவஜஸ்தம்ப(கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோவில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங்களை நிகழ்த்த முடியாது. ஆனால் இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும்.

  நடிமி படி காவிலி இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோவிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுர வாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள்ளது. வெளி கோபுர கதவுகளை விட இந்த கோபுர கதவுகள் சிறியது.

இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. “வெண்டிவாகிலி என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோவிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பதினைந்தாம் நூற்றாண்டில் சந்திரகிரி பகுதியை ஆண்ட மல்லண்ணா என்பவர் இந்த மண்டபத்தை உருவாக்கினார். 16 தூண்கள் உள்ள இந்த மண்டபம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கொலுவு சீனிவாச மூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து சேவை சாதிப்பார். இந்த மண்டபத்தில் திருமணி, திருமாகமணி என்னும் இரண்டு மணிகள் உள்ளன. நைவேத்திய நேரத்தில் இந்த மணிகள் ஒலிக்கப்படும். இதன் காரணமாக இந்த மண்டபத்திற்குதிருமாமணி மண்டபம் என்று பெயரிடப்பட்டது. முக மண்டபம் என்றும் இதனை சொல்வர். மண்டபத்தின் கிழக்கே கருடர் சந்நிதியும் வடக்கே உண்டியல் மண்டபமும் உள்ளது.

  திருமாமணி மண்டபத்தை கடந்து பங்காருவகிலி எனப்படும் தங்க நுழைவு வாயில் வழியாகவே பெருமாளை தரிசிக்க நாம் செல்கிறோம். இதன் வாசலில் ஜெயன்,விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசலில் உள்ள மரக்கதவை தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடுகளில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.

  வெங்கடாஜலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையைராமர் மேடைஎன்கின்றனர். இதில் ராமர், சீதா, லட்சுமணன் ஆகியோர் சிலைகளும் விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. குலசேகராழ்வார் படியை ஒட்டிப்போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர். இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாஜலபதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரைக் காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு  குலசேகர படி என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here