Home தமிழகம் வல்லக்கோட்டை கிராமத்திற்கு அனைத்து சுகாதார வசதிகளுடன் அடிப்படை வசதிகள் மாவட்ட கலெக்டர் தகவல்

வல்லக்கோட்டை கிராமத்திற்கு அனைத்து சுகாதார வசதிகளுடன் அடிப்படை வசதிகள் மாவட்ட கலெக்டர் தகவல்

10
0
SHARE

காஞ்சிபுரம், அக். 3&

வல்லக்கோட்டை கிராமத்தில் அனைத்து சுகாதார வசதிகளுடன், அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் உறுதியளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 634 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஓன்றியத்திற்குட்பட்ட  வல்லக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பா. பொன்னையா கலந்து கொண்டார்.

கிராமசபைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று, தூய்மை குறித்து பொதுமக்களுடன் உறுதிமொழி ஏற்றார்.

அதன்பின், கிராம வளர்ச்சி மற்றும் தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கினார், பின் தனிநபர் கழிப்பிடம் குறித்து, மக்கள் உணர்ந்து செயல்பட்டு, வரும் காலங்களில் தூய்மையான, சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டுமென கிராமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், அனைத்து சுகாதார வசதிகளுடன் கூடிய சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கிராம முழுமைக்கும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

மேலும், கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி இங்குள்ள இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்குதல், சுற்றுப்புறத்தைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும் எனவும் கிராம மக்களிடம் எடுத்துக் கூறினார்.

மகளிர் குழுவினர், சமையல் பயிற்சி பெற்றுள்ளதால், அதன்மூலம்,  வருவாயைப் பெருக்க சமையற்கூடம் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்ததின் பேரில் உடனடியாக சமையல் கூடம் கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி, முன்னாள் ஓன்றியக்குழு துணைத் தலைவர் சிவக்குமார், ஓன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மங்கையற்செல்வி, லீமாரோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதா சீனிவாசன், பானுமதி, ஏழுமலை, ஊராட்சி செயலர் சுந்தரம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.