Home தலையங்கம் ஆளும் வளரனும்… அறிவும் வளரனும்…!

ஆளும் வளரனும்… அறிவும் வளரனும்…!

4
0
SHARE

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மனதில் ஏற்படும் கனவுகள், எதிர்பார்ப்புகள் ஏராளம். குழந்தைகள் சிறந்த கல்வி பெறவேண்டும் என பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள் கணக்கில் அடங்காது.

ஆனால் குழந்தைகளின் கல்விக்கு காட்டும் அக்கறை அவர்களின் ஆரோக்கியத்தின் மீது எந்த அளவு காட்டப்படுகிறது? நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 5&ல் ஒரு பங்கினர் 5 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் ஆவர்.

குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியின் மிக முக்கியமான கட்டம் 5 முதல் 11 வயது வரையிலான ஆரம்ப பள்ளி பருவமே. இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருப்பது மிகவும் முக்கியம்.

அவர்களின் ஆரோக்கியம் சீராக இருந்தால் மட்டுமே அவரவர் மனதளவிலும் உடலளவிலும் சிறந்த வளர்ச்சியை பெறமுடியும். 5 முதல் 11 வயதில் ஆண் குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம் 18 முதல் 37 கிலோ எடையும், உயரம் 110 முதல் 142 செ.மீட்டர் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம் 17 முதல் 33 கிலோ எடையும் 108 முதல் 140 செ. மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

ஆனால் நம் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடால் போதிய வளர்ச்சி இல்லை. கல்வி பயிலும் வயதில் சிறந்த அறிவாற்றல், அதிக கவனம், நல்ல செயல்திறன் ஆகியவை தேவை.

முதன் முதலாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பலர் குழந்தைகள் மேல் தங்கள் எதிர்பார்ப்புகளை திணிப்பதில் காட்டும் ஆர்வம் அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை கொடுப்பதில் இருப்பதில்லை.

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் புதிய சூழலுக்கு பழக சிறிது காலம் ஆகும் என்பதை பெற்றோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணவு பழக்கவழக்கம் உட்பட அனைத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும்.

பல பெற்றோர்கள் குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் நேரத்தை காரணம் காட்டி குழந்தைகளுக்கு சரியாக காலை உணவை தாங்களே கொடுக்காமல் விடுவது தற்போது அதிகரித்து வருகிறது.

காலை உணவு நல்ல திடமான அரோக்கியமான உணவாக இருக்க வேண்டியது அவசியம். துரித உணவுகளோ அல்லது வெறும் பழங்கள் அல்லது பால், கஞ்சி போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. இட்லி, தோசை சாம்பார், சட்னி, பொங்கல், சப்பாத்தி, ராகி அடை, தினை உப்புமா போன்ற வகை வகையான உணவு வகைகளை சாப்பிட பெற்றோர் பழக்க வேண்டும்

அப்போது தான் குழந்தைகள் நாள் முழுவதும் நல அறிவாற்றலுடன் உற்சாகமாக செயல்படுவார்கள். அதை விட்டு காலை உணவை குழந்தைகளுக்கு கொடுக்க தவறினால் அது குழந்தைகளை சோர்வடைய செய்யும். அதன் காரணமாக குழந்தைகளால் பாடத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாது.

பள்ளி பருவத்தில் குழந்தைகள் கேள்வி கேட்பதிலும் புதிய விஷயங்களை கற்பதிலும் ஆர்வமாக இருப்பர். அதனால் உணவின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

உணவின் மேல் குழந்தைகளுக்கு அக்கறையும் ஆர்வமும் அதிகரிக்க பெற்றோர் உணவு குறித்து பல விஷயங்கள் பேச வேண்டும். குழந்தைகளை காய்கறி வாங்க செல்லும் போது உடன் அழைத்து செல்லலாம். அங்கு காய்கறிகளை காட்டி அவற்றை பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் அவற்றின் மீது குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டுமின்றி உணவும் வழங்கப்படுவது பெற்றோரின் கடமை. இதில் வெட்கப்பட ஏதும் இல்லை. மாறாக விழிப்புணர்வு அவசியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here