Home சிறப்புச் செய்திகள் நாமும் நாளை முதியோர் ஆவோம்…

நாமும் நாளை முதியோர் ஆவோம்…

62
0
SHARE

உலகில் கொடுமையான விஷயம் சொந்த பந்தங்கள் இருந்தும் அனாதையாக வாழ்வது தான். இன்றைய முதியோர்களின் நிலையும் அது தான். பரவலாக உலகம் முழுவதும் இந்த வியாதி வியாபித்துக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே காணப்படுகிறது. வாழ்க்கைச் சூழல் என்பது ஒரு புறம் இருந்தாலும், மனித நேயம் என்பது அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை தான் இது உணர்த்துகிறது.

இதனை கருத்தில் கொண்டே உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று  கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

1991 ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும். வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும். அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.

சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும். இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்.

நம் இந்தியாவை பொறுத்தவரை பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007ன் படி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன.

இதில் 13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஓடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின் விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை நடைமுறைப் படுத்தவும் விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம், தீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான மற்றும் கட்டாயமான குழந்தைகள் உற்றார் மூலம் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலன். பராமரிப்பு. உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தல். கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல். மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல். மூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல் என முதியோர் நலனை பாதுகாக்கும் சட்டமாக இது விளங்கி வருகிறது. தமிழ் நாட்டில் முதியோர்கள் நலனில் அரசு தீவிர அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும் முதியோர் நலன் காக்க பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாதம்  ரூ.1000  உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இலவச மத்திய உணவு திட்டமும், இலவச அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இத்தினத்தில், தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் முதியோரை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இடங்களில், முதியோரின் நிலை பரிதாபமாக உள்ளது. பெற்ற பிள்ளைகள் இருந்தும், 60 வயதைத் தாண்டிய பின்னரும், ஓய்வெடுக்க முடியால், பசிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் நிறைய முதியோரை நாம் பார்க்க முடிகிறது. இவர்களின் அனுபவங்களை, பொக்கிஷமாக கருத வேண்டும்.

மனித நேயம் இன்னும் தழைத்தோங்குகிறது என்பதற்கு சில உதாரணங்களும் இருக்கின்றன. ஆதரவற்ற முதியோர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படி ஒருவரை சந்தித்தோம். வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த அப்பு () சந்திரசேகர் பான் ப்ரோக்கர் தொழில் செய்யும் இவர். ஆதரவற்ற முதியோர்களுக்கு அவர் செய்து வரும் உதவிகளை விளக்கினார்.

எனக்கு தற்போது 45 வயதாகிறது. கடந்த 15 வருடங்களாக முதியோர்களுக்கு சேவை செய்து வருகிறேன். இது இயல்பாகவே எனக்கு வந்தது. பெரிய அளவில் இல்லையென்றாலும் என வசதிக்கேற்ப சிறு சிறு உதவிகளை செய்து வருகிறேன்.

எனது நண்பர்களும் என் ஆர்வத்தை பார்த்து எனக்கு உதவி செய்து வருகிறார்கள். சாலைகளில் அனாதையாக இருக்கும் முதியேர்களுக்கு உணவு வழங்குவது, அவர்களின் சுகாதாரத்தை காப்பது, உடல் நிலை மோசமானவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது என எனது பணி சென்று கொண்டிருக்கிறது.

இப்போதுகடந்த 1 மாதமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள முதியோர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாரத்துக்கு இரண்டு முறை வழங்கி வருகிறேன். 20 கேன் தண்ணீரை பெற்று அங்குச் சென்று உள்நோயாளிகள், புறநோயாளிகளுக்கு தண்ணீரை வழங்கி வருகிறேன். இதனை பார்த்து தண்ணீர் கேன் வழங்கும் இளைஞரும் தன் பங்குக்கு 5 கேன்களை இலவசமாக வழங்கி வருகிறார். முதியோர்களிடம் பேசி அவர்களின் மன சுமையை என்னால் முடிந்த வரை ஆற்றி வருகிறேன்.

குழந்தைகள்போலமனம்படைத்தநம்மைஉருவாக்கியமுதியோர்களைஎப்படிதான்அநாதையாகஅலையவிடுகிறார்களோ? அந்த கேள்வி தான் என்னை அதிகமாக உறுத்துகிறதுஎன்றார். இன்றைக்கு மூன்றில் ஒருவர்: உலக மக்கள் தொகையில் 10ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது 2050ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும், நமது நாட்டில் நடக்கிறது. இவ்வாறு முதியோரை கவனிக்க மறுத்தவர்கள், அவர்களை திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வர முயற்சி எடுங்கள். முதியோரின் ஆசி இருப்பின், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

முதியோரும், குழந்தையும் மனதால் ஒன்று எனக் கூறுவர். ஞாபக மறதி காரணமாக, நம்மிடம் கேட்டவற்றையே திரும்ப திரும்ப கேட்பர். இதற்கு அவர்களிடம் கோபம் காட்டாமல், பரிவுடன் உதவ வேண்டும். முதியோரை இதுநாள் வரை, கவனிக்க மறந்து விட்டாலும், இத்தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அவர்களிடம் அன்பு செலுத்த முன் வரவேண்டும். நாமும் நாளை முதியோர் ஆவோம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.