Home தலையங்கம் தொலைநோக்கு பார்வை தேவை…

தொலைநோக்கு பார்வை தேவை…

20
0
SHARE

நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு கடந்த 1982&ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமே குண்டர் தடுப்பு சட்டம். தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள்,  கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், திருட்டு வீடியோ, டி.வி.டி. விற்பனை செய்பவர்கள், மணல் கடத்தல், குடிசை நில அபகரிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி இந்த சட்டத்தின் மூலம் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத 12 மாத சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் என்று கருதினால் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.

ஆனால் நாட்டின் நன்மைக்காகவும், உரிமைக்காகவும் போராடியவர்ளையும் இந்த சட்டத்தின் மூலம் அடக்கியாலும் யுக்தி கையாளப்பட்டு வருகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்க கோரியும், நீட் மருத்துவ நுழைவு தேர்வை எதிர்த்தும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ஈடுபட்ட சிலர் மீதும் இந்த குண்டர் தடுப்பு சட்டத்தை ஏவி அடக்கியாலும் கொள்கை பின்பற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சேலத்தில் கல்லூரி ஒன்றின் வாயிலாக துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட வளர்மதி என்ற மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கடந்த மே மாதம், சென்னை மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதும் இந்த குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. என்றாலும், இவர்கள் மீது ஒரு குற்ற வழக்கு கூட கிடையாது. போராட்டம் என்பது மக்களின் உணர்வாகும். தங்களுக்கான உரிமையை கேட்கும் போதுகிடைக்காவிட்டால் தானே போராட்டம் என்ற ஒன்று உதயமாகிறது. இதில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு சமாதான முயற்சியை கையாள வேண்டும். ஆனால் இதுபோன்ற சட்டங்களை அவர்கள் மீது பாய்ச்சலாமா? இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததால் மேலும் பலப்பல போராட்டங்கள் வெடித்தன. இதனால் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமான பாதையை நோக்கி சென்றது. மக்களுக்கு அரசின் மீதும், அதிகாரிகள் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை ஏற்பட வேண்டுமே தவிர, அவ நம்பிக்கை எழுந்துவிடக்கூடாது. சட்டம் ஒழுங்கின் போக்கை இதுபோன்ற செயல்கள் சீரழித்துவிடும் என்பது இவர்களுக்கு தெரியாதா? எதை செய்தாலும் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டால் எல்லாம் நலமே…!