Home சுடச்சுட ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின்...

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

45
0
SHARE

சென்னை, செப். 25 &

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா   மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து தாங்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய் என்று அ.தி.மு.க. அரசின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாகத் தெரிவித்து, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

முழுவிவரம் வேண்டும்

ஒரு முதல்வரின் உடல்நிலை குறித்து, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில்,   ஜெயலலிதா   சிகிச்சை பெற்று வந்தபோது அது பற்றிய முழு விவரத்தையும் வெளியிடுமாறும், மக்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் புகைப்படத்தை வெளியிடுமாறும்   கருணாநிதி   தெரிவித்தார். அப்போது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுங்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இப்போது அவர்களே புகைப்படம் மட்டுமல்ல,   ஜெயலலிதா   சிகிச்சை பெறுகின்ற வீடியோவையே வெளியிடவேண்டும் என்று தங்கள் உள்கட்சி அரசியலை பொதுவெளி யுத்தமாக மாற்றியிருக்கிறார்கள்.

யாருமே பார்க்கவில்லை

சிகிச்சை பெற்று வந்த காலத்தில் ஜெயலலிதாவை   ஆளுநர் உள்பட யாருமே பார்க்கவில்லை,  என்றும்,  அவர் இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாமே பொய் என்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவியேற்பு உறுதிமொழியேற்ற அமைச்சரே கூறுகிறார். அவர் உடல்நிலை பற்றி, திசைதிருப்பும் கூட்டுச்சதியில் அமைச்சர்கள் மட்டுமல்ல, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா   அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, முதல்வரின் இலாகாக்களை பெற்றுக் கொண்ட  ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டிருக்கிறார் என்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்குமூலத்தின் மூலம் தெரிய வருகிறது.   ஜெயலலிதா, தன் இலாகாக்களை ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்குமாறு 11.10.2016 அன்று   ஆளுனருக்கு  கொடுத்த அறிவுரை எப்படி பெறப்பட்டது? என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது.

சந்தேகம் எழுகிறது

யாரும் பார்க்க முடியாத நிலையில் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா தமிழகம்  புதுவை ஆகிய மாநிலங்களின் 4 தொகுதி இடைத்தேர்தல்களில் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் படிவத்தில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்திருக்கிறார். அவரை நேரில் சந்திக்கவே இல்லை என்றால் எப்படி இந்த கைரேகை பெறப்பட்டது? என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. அதுபோலவே, இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து ஜெயலலிதா பெயரில் வெளியான அறிக்கையில் அவரது கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது. வேட்புமனுவில் கையெழுத்து போட முடியாத நிலையில் கைரேகை மட்டுமே வைத்தவர், அறிக்கையில் கையெழுத்திட்டது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையிலேயே இது அவர் கையெழுத்துதானா? அவரது உடல்நிலையைக் காரணமாக வைத்து வேறு யாரேனும் கையெழுத்து போட்டார்களா? தமிழக முதல்வரின் கையெழுத்தையே போலியாகப் போடக்கூடியவர்கள் அவரைச் சுற்றி இருந்திருக்கிறார்களா?

எப்படி வேடிக்கை பார்த்தனர்?

அப்போது ஒட்டுமொத்த தமிழக அரசே அப்போலோ மருத்துவமனையில் முகாமிட்டு இருந்ததே? முதல்வர் பொறுப்பிலிருந்த   ஓ.பன்னீர்செல்வமும், இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி போன்றோரும் எப்படி இந்தக் கொடுமையை வேடிக்கை பார்த்தனர். ஜெயலலிதா இறந்தபிறகு இருவருமே முதலமைச்சர் பதவிக்கு வந்தார்கள். 6.12.2016 முதல் 6.2.2017 ராஜினாமா செய்யும் வரை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஏன் இந்த மர்மத்தை மறைத்தார்?

மர்மங்கள் உள்ளது

அதன்பிறகு, 16.2.2017 முதல் இன்றுவரை முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஏன் இன்னும் இந்த மர்மங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்? இப்போது இருவரும் இணைந்தே ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக் கமிஷனுக்கு நீதிபதியை நியமிக்காமல் முட்டுக்கட்டை போடுவது ஏன்? இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் மரணமடைந்த வரை உள்ள மர்மங்களை இனிமேலும் மறைப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

பகீர் தகவல்

ஆளுனர் மருத்துவமனையில் முன்னாள் முதல்வரை சந்திக்கவில்லை,என்ற பகீர் தகவலை அமைச்சர் கூறுவதால், இந்த அரசு அமைக்கும் விசாரணைக் கமிஷன் மூலம் மரணத்தில் உள்ள மர்மங்கள் நிச்சயம் வெளிவராது. அதுமட்டுமின்றி, விசாரணைக் கமிஷன் அமைக்கிறோம் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த மர்மத்தை மறைக்க இணைந்தே செயல்படுகின்றனர்.

தவியாய் தவிப்பு

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாகப் பேசியதை மறைக்க தி.மு.க மீது விமர்சனங்களைத் தொடுத்துள்ளனர். அதை தி.மு.க. எதிர்கொள்ளும்.அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை திசை திருப்ப  பழனிசாமியும், பன்னீர்செல்வமும் நேற்றிலிருந்து தவியாய் தவிப்பதையும் உணர முடிகிறது. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் குழு வந்து பரிசோதித்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, முதலமைச்சரின் உடல்நிலையை கூர்ந்து கவனித்து வருவதாக அறிவித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு மத்திய அரசும் உதவியிருக்கிறது என்றநிலையில், அவர் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை வெளிக்கொணர வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆகவே தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என அதில் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரது உடல் நிலை குறித்து

தாங்கள் கொடுத்த தகவல் அனைத்தும் பொய் என அமைச்சர்

திண்டுகல் சீனிவாசன் பொது மேடையில் பேசியதோடும் மன்னிப்பும் கேட்டார். அதனால் மறைந்த ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் உள்ளதால் அவரின்

மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட

வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.