Home Uncategorized ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் சாத்தியப்படுமா?

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் சாத்தியப்படுமா?

16
0
SHARE

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விரைவிலேயே ஜி.எஸ்.டி.யில் இணைப்பது குறித்து மத்திய அரசு சிந்திக்கத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டால் அதனால் நுகர்வோர் பயன் அடைவார்கள். மாநில அரசுகள் எந்த அளவுக்கு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பதும், மத்திய அரசு முழு மனதுடன் இதை அமல்படுத்த முற்படுமா என்பதும் கேள்விக்குரியது. 2012இல் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலர் கொடுத்து இறக்குமதி செய்து கொண்டிருந்தபோது இந்தியாவிலுள்ள பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 50 டாலராகக் குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ.70க்கும் அதிகம்.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.51, டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.91 என்கிற நிலையில் தில்லியிலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.09, டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.05 என்கிற நிலையில் சென்னையிலும் சில்லறையில் விற்கப்படுகிறது. நரேந்திர மோடி அரசு பதவியேற்ற மே 26, 2014 அன்று, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41, டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.71 என்கிற நிலையிலும், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.60, டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.50 என்கிற நிலையிலும் காணப்பட்டது. இதே காலகட்டத்தில் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 108.02 டாலரிலிருந்து 53.83 டாலராகக் குறைந்தும்கூட அந்த வீழ்ச்சியின் பயன் நுகர்வோருக்குக் கிட்டவில்லை.

பெட்ரோல், டீசலின் விலையை சர்வதேச விலையுடன் இணைத்து நாள்தோறும் நிர்ணயிப்பது என்கிற வழக்கம் கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 5% அதிகரித்திருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 7.89 டாலர் அதிகரித்திருக்கிறது என்று இந்த விலை உயர்வை பெட்ரோலிய நிறுவனங்கள் நியாயப்படுத்த முற்பட்டாலும்கூட, தளர்த்தப்பட்ட விலைக் கட்டுப்பாட்டின் பயன் பொதுமக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.

சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலைச் சரிவின் பயன் பொதுமக்களை போய்ச் சேராததற்கு முக்கியமான காரணம் மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கும் ஏற்ப கலால் வரி, விற்பனை வரி ஆகியவற்றை அதிகரித்ததுதான். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.9.48லிருந்து ரூ.21.48 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.56லிருந்து ரூ.17.33 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு வகையில் சொல்லப் போனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைச் சரிவின் பயனை எல்லாம் அரசு தனது நிதி வருவாயை பெருக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொண்டதே தவிர, பொதுமக்களுக்கு அதன் பயனைத் தரவில்லை.

பெட்ரோல், டீசலுக்கு அதிகப்பட்ச 28% ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அறிமுகப்படுத்தி சர்வதேச கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயனை பயனீட்டாளர்களுக்கும் வழங்க அரசு முற்படுவதுதான் பாராட்டுக்குரிய முடிவு!ஆனால் இது சாத்தியப்படுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here