Home தலையங்கம் ரோகிங்யா விவகாரத்தில் நம்பிக்கை பிறக்கிறது!

ரோகிங்யா விவகாரத்தில் நம்பிக்கை பிறக்கிறது!

147
0
SHARE

வங்க தேசத்தையும், மியான்மரையும் பிரிக்கிறது அந்த ஆறு. வானில் இருந்து பார்த்தால், இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் வெள்ளை நூல் போன்று காணப்படும். அதுதான்நப்நதி.

கொத்து கொத்தாக ரோகிங்யா, அகதிகள் செத்து மடியும் இதே ஆற்றில்தான் அவர்களின் வாழ்க்கையும் துவங்கியது என்றால் நம்ப முடிகிறதா? ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின்போது, பர்மாவுக்கு (தற்போதைய மியான்மர்) பிழைப்பு தேடி சென்றவர்கள் ஏராளம். ஈழ தமிழர்கள் மட்டுமின்றி நம்ம ஊர் தமிழர்கள் வரை, சாதியை கவுரவம் எனக்கருதி பெயருக்கு பின்னால் சுமந்து, சச்சரவின்றி வாழ்ந்த காலம் அது.

இவர்களை போன்று வங்கதேசத்தில் இருந்து சிலர் பிழைப்பு தேடி மியான்மர் சென்றனர். அப்போது நப் நதி அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. பலர் நீந்தியே கடந்து சென்று உள்ளனர். காலபோக்கில் மியான்மர் பூர்வக்குடி மக்களுடன், அவர்கள் நெருங்கி விட்டனர். திருமண பந்தங்களும் நடந்தேறி விட்டது.

வங்கதேசம்& மியான்மர் நாட்டு எல்லையையட்டி உள்ள வடக்கு ராக்கின் மாகாணமே, இவர்கள் வசிக்கும் பகுதி. இவர்களின் பேச்சு சாயல், பெரும்பாலும் வங்க மொழி கலந்தே இருக்கும். ஒரு கட்டத்தில் சிறுபான்மையினராக இருந்த இவர்கள், பெருபான்மையினராக உருவெடுத்தனர்.

அப்போதுதான் பிரச்சினை எழ ஆரம்பித்தது. தங்களுக்கு தனிமத வழிபாடு, அரசு துறையில் வேலை வாய்ப்பு மற்றும் அரசின் இதர சலுகைகள் மற்றும் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்று போராட துவங்கினர். இது மியான்மர் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 1982&ம் ஆண்டு மியான்மர் அரசு, ரோகிங்யா முஸ்லிம்களின் குடியுரிமையை பறித்தது. இது ரோகிங்யா மக்கள், ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்த காரணமாயிற்று. உயிருக்கு பயந்து, பலர் அகதிகளாக வெளியேறினர்.

இது எங்கள் நாடு, வெளியே போஎன்றது மியான்மர். இதே வார்த்தையை ஒருகாலத்தில் வங்கதேசமும் கூறியது. பர்மாவில் நூற்றுக்கணக்கான இன குழுக்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன. அவர்களை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு மக்கள், ரோகிங்யா முஸ்லிம்களை ஏனோ ஏற்றுக் கொள்வதில்லை.

ரோகிங்யா மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதிகள் (அரக்கான்) பண்டை காலத்தில் இருந்தே, அந்த இன மக்களின் பூர்வ பகுதிகளாகவே இருந்துள்ளது. இதற்கு பல வரலாற்று சாட்சிகள் காண கிடைக்கிறது. அந்த பகுதிகள் வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டு எல்லையில் அமைந்துள்ளன. இந்தியாவும், பர்மாவும் ஆங்கிலேய அரசின் காலனி ஆதிக்கத்தில் இருந்த போது எல்லைகள் வகுக்கப்படவில்லை. பின்னாளில் ரோகிங்யா மக்கள் அதிகளவு பெருகவும் இதுவே காரணமாயிற்று. மேலும் ஆங்கிலேய அரசின், விவசாய குடியமர்தலும் ஒரு காரணம்.

ரோகிங்யா மக்கள் தற்போது இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். ஒன்று ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக அதிபயங்கர தாக்குதல் நடத்துபவர்கள். மற்றொரு மக்கள், மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகியால் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்பிக்கையில் இருப்பவர்கள். மியான்மர் ராணுவத்தினருக்கும், இவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் பலியான உயிர்கள் ஆயிரத்தை தாண்டும். அப்பாவி மக்கள் கைகளில் ஆயுதங்களை கொடுத்து, பலிகடா ஆக்கும் அந்த பயங்கரவாதிகள் யார்?

ஆட்சி மாறினாலும், காட்சி மாறாமல் ரோகிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் மியான்மர் அரசு நடந்து கொள்வது ஏன்? இதுபோன்ற விடையில்லா பல்வேறு கேள்விகள் மனதில் எழுகிறது. அகதிகளாக வங்க தேசத்தில் வசிக்கும், ரோகிங்யா மக்கள், உரிய சரிபார்ப்புக்கு பின்னர், நாட்டிற்குள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்ற ஆங் சாங் சூகியின் கருத்து மூலம் புதிய நம்பிக்கை பிறந்து உள்ளது.

மியான்மர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சிலர் கூறி வரும் போதிலும், 50 சதவீத ரோகிங்யா மக்கள் அமைதியான முறையில் வாழ்கின்றனர் என்ற ஆங் சாங் சூகியின் கருத்தையும் நிராகரிக்க முடியாது.