Home சுடச்சுட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை:நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை நீடிப்பு சென்னை ஐகோர்ட்டு...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை:நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை நீடிப்பு சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

16
0
SHARE

சென்னை, செப்.21&

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரிந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தனர். இதனால் ஓரளவுக்கு பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் பிரச்சனை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. டி.டி.வி. தினகரன் அணி என்று ஒன்று உருவாகியுள்ளது. இந்த அணிக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வந்தனர். பின்னர் இந்த ஆதரவு 19ஆனது.

கடிதம் கொடுத்தனர்

இந்த 19 எம்.எல்.ஏ.க்களும் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் ஒன்றை அளித்தனர். கட்சிக்கு எதிராக இவர்கள் செயல்பட்டதாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் தனபாலுக்கு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் விளக்கம் அளித்து எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார். இதனால் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 18ஆக குறைந்தது.

கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பிறகும் 18 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்காததால், அவர்களை தகுதி இழப்பு செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியானது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு 18 எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அ.தி.மு.க. கட்சியிலேயே இருக்கும் தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால், அவசர வழக்காக எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதி துரைசாமி, ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கையும் சேர்ந்து 20&ந் தேதி (நேற்று) விசாரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 20&ந் தேதியான நேற்று, 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் சோமயாஜி, அரிமா சுந்தரம், வைத்தியநாதன், விஜயநாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான்குர்ஷித், பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க. சார்பில் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

ஊழல்

18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடுகையில், தமிழக அரசில் ஊழல் மிகவும் மலிந்துவிட்டது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்வருக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். இந்த சூழ்நிலையில் சபாநாயகர் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துள்ளார். இது நீதிக்கு எதிரானது.

கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது 18 எம்.எல்.ஏ.க்களும் அரசை ஆதரித்து வாக்களித்தனர். தற்போது அவர்கள் கட்சி தாவிவிட்டதாக சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கட்சித் தாவவில்லை. எனவே கட்சி தாவல் தடை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கட்சி தாவவில்லை

18 எம்.எல்.ஏ.க்களும் வேறு எந்த கட்சிக்கும் தாவவில்லை. எடப்பாடி பழனிசாமி அரசில் ஊழல் நடக்கிறது. இதனால் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று மட்டுமே சொல்லி உள்ளனர்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே 18 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே இவர்களின் தகுதி நீக்கம் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சபாநாயகர் உத்தரவுகள் தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டு வழங்கியுள்ள வழக்குகள் தெளிவாக உள்ளன.

உரிய விளக்கம்

முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது. 18 எம்.எல்.ஏ.க்களும் உரிய விளக்கம் அளிக்க சபாநாயகரிடம் சில ஆவணங்கள் கேட்கப்பட்டது. அந்த ஆவணங்களை அவர் தரவில்லை. அவற்றை தந்தால் விசாரணைக்கு ஆஜராக 18 எம்.எல்.ஏ.க்களும் தயாராக உள்ளனர்.

மேலும் தகுதி இழப்புக்கான உத்தரவை நேரில் வழங்கவில்லை. இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை நான் பார்த்தே தெரிந்து

கொண்டேன். தகுதி நீக்க நோட்டீஸ் வழங்காததும் தவறாகும். எனவே தகுதி  நீக்கத்தை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அரிமா சுந்தரம்

இதையடுத்து சபாநாயகர் தரப்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தர¢ ஆஜராகி வாதிடுகையில், வழக்குக்கு தேவையில்லாத வாதங்களை டி.டி.வி. தினகரன் அணியினர் முன் வைக்கிறார்கள். இந்த வழக்கில் தேவை இல்லாமல் மத்திய அரசை குறை கூறுகின்றனர். சபாநாயகர் மீதும் கண்மூடித்தனமாக குறை கூறுகின்றனர். அரசு மீதும், சபாநாயகர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருப்பதால் நாங்கள் உரிய பதில் அளிக்கவும், விளக்கம் அளிக்கவும் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளது ஏன்? என்பதற்கான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்கவும் எங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டது என்றார்.

அப்போது நீதிபதி துரைசாமி குறுக்கிட்டு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்புக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வக்கீல் அரிமா சுந்தரம் கூறுகையில், 18 எம்.எல்.ஏ.க்களும் சட்டத்துக்கு உட்பட்டு தான் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் நடத்தக்கூடாது

இதையடுத்து நீதிபதி துரைசாமி தெரிவிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் காரணமாக 18 தொகுதிகள் காலியாக உள்ளது. மறு உத்தரவு வரும் வரை அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கூடாது. எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்துக்கு முதல்வர், அரசு தலைமை கொறடா, சட்டசபை செயலாளர் ஆகியோர் உரிய பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 4&ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை 18 தொகுதிகளுக்கான எந்த அறிவிப்பையும் வெளியிடக்கூடாது என்று தெரிவித்தார். ஆனால், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்துக்கு தடை எதுவும் நீதிபதி விதிக்கவில்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை என்றும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.