Home தமிழகம் நாட்டை வளமாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் முதல்வர் சுதந்திரதின வாழ்த்து

நாட்டை வளமாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் முதல்வர் சுதந்திரதின வாழ்த்து

32
0
SHARE

சென்னை, ஆக. 15& நாட்டை வளமாக்க ஒற்றுமையுடன் உழைக்கவேண்டும் என்று முதல்வர் சுதந்திரதின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சுதந்திரதின வாழ்த்து செய்தியில், ஆங்கிலேயர்களிடம் இருந்து, நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில்,  நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாருக்குள்ளே நல்ல நாடாகிய நம் பாரத நாடு, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் புரிந்து, தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேசத்திற்காக தியாகம் செய்து, இந்திய தேசத்திற்கு விடுதலை பெற்றுத் தந்த  விடுதலை போராட்ட வீரர்களையும், வீராங்கனைகளையும் நினைவு கூரும்  நன்னாள் இந்தச் சுதந்திரத் திருநாளாகும்.

மறைந்த முதல்வரின் அரசு, இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்றிடும் வகையில், தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 5,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது; வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல் களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது;

விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படி 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, போன்ற பல்வேறு சீரிய திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, நம் தாய்திருநாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்த தியாக வீரர்களை மக்கள் நினைவு கூரும் வகையிலும், அவர்தம் தியாகங்களை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம்,  வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், தியாகி சுந்தரலிங்கனார் மணிமண்டபம் என  பல்வேறு தியாகிகளின் நினைவகங்களை  அரசு நிறுவி சிறப்பித்ததுடன்,  தியாகிகளின் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள், மணிமண்டபங்களை புதுப்பித்து புனரமைத்து வருகிறது. மேலும், சுதந்திர போராட்ட வீரர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.மறைந்த முதல்வர் சுதந்திர போராட்ட வீரர்களின் நல்வாழ்விற்காக தீட்டிய திட்டங்களை,தமிழ்நாடு அரசும் தொடர்ந்து முழு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

இந்திய நாட்டின் தனிச் சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வினை காத்து, சாதி, மத வேறுபாடுகளை களைந்து, நமது நாட்டை வளமையும் வலிமையும் மிக்கதாக உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.